சுதா மூர்த்தி ஒரு எழுத்தாளர் மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவர் ஆவார். இவரின் பேச்சுகளும், எழுத்துக்களும் எதார்த்தமாக இருப்பது மட்டுமின்றி மக்களை அது ஊக்குவிக்கிறது. அப்படி அவர் கூறிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களால் யாரையும் மகிழ்விக்க முடியாது. மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை வாழ்வது கடினமானது"
உங்கள் விருப்பத்தை விடவும், கருத்துக்களை விடவும் மற்றவர்கள் கூறுவதை அவர்களின் மகிழ்ச்சிக்காக செய்தால், உங்களால் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது.
"முயற்சிகள் இல்லாத இலக்கு வெறும் கனவு மட்டுமே. இலக்கு இல்லாத முயற்சிகள் நேரத்தை மட்டுமே வீணாக்கும். எப்பொழுது இலக்கும், முயற்சியும் ஒன்று சேருகிறதோ, அப்பொழுதுதான் மாற்றங்கள் ஏற்படும்"
நாம் முதலில் ஒரு இலக்கை முடிவு செய்துவிட்டு, அந்த இலக்கை நோக்கி செல்ல முயற்சிகள் செய்ய வேண்டும். எதுக்காக முயற்சிக்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தால் அல்லது இலக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு முயற்சிக்காமல் இருந்தால் நம்மால் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பார்க்க முடியாது.
"உங்களால் உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும். முடியாது என்று எதுவுமே கிடையாது. ஆனால் அதற்கான விருப்பம் உங்களுக்கு வேண்டும். உங்களின் முழு திறமையும், ஆற்றலும் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். பெரியவர்கள் ஏதாவது சொல்லும் பொழுது அவர்களை விட நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சொல்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறந்த நிலை தற்செயலாக வருவதில்லை. அது பயிற்சியின் வெளிப்பாடாகும்"
அனைவரும் நமக்கு இருக்கும் சில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதேபோல் அது அடுத்த நாளே அல்லது ஒரு சில நாட்களிலேயே மாறிவிட வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் நாம் பழக்கங்களை மாற்றிக் கொள்ள அதற்கான அவகாசத்தை நம் அளிக்க வேண்டும். பல முயற்சிகளுக்கு பின்னே ஒரு பழக்கத்தை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
"சில சமயம் ஒரு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்காமல் இருக்கலாம். தீர்வு கிடைக்காமல் இருப்பதே ஒரு தீர்வு தான். அனைத்தும் நீங்கள் எப்படி அதை பார்க்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது. நாம் பலரைப் பற்றி கூறும் கருத்துக்கள், நாம் என்ன நினைக்கிறோம் என்பதிலிருந்து வருவது தான்"
பிரச்சனைக்கான தீர்வு நாம் அதை எப்படி பார்க்கிறோம் என்பதில் உள்ளது. எடுத்துக்காட்டிற்கு உருவ கேலியை எடுத்துக் கொள்ளலாம். நம்மை ஒருவர் உருவ கேலி செய்கிறார் என்பதற்காக வருந்தி நமக்கு பிடித்ததை நாம் செய்யாமலேயே இருக்கலாம் அல்லது பேசுகிறவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்று எண்ணி நம் மனதிற்கு பிடித்ததை செய்யலாம். இவை இரண்டுமே நாம் உருவ கேலி என்ற பிரச்சினையை எப்படி பார்க்கிறோம் என்பதின் விளைவாகும்.
"நம்பிக்கை என்பது அனைத்தும் நான் நினைத்தபடி நடக்கும் என்பது அல்ல. அது நாம் தோல்வியுற்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தரும். அந்தப் பாதையில் மீண்டும் முன்னேற நம்பிக்கையை தரக்கூடியது"
அனைத்தும் நாம் நினைத்தபடி நடக்கிறது என்பதால் நீங்கள் நம்பிக்கையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. நீங்கள் நினைக்காதது நடந்தால் கூட மனம் தளராமல் முயற்சிப்பதே நம்பிக்கையாகும்.
"நிறைய படிக்காமல், தற்போது நல்ல நிலைமையில் இருப்பவர்கள் பலரை என்னால் உங்களுக்கு எடுத்துக்காட்ட முடியும். இந்த உயர்வுக்கு காரணம் அவர்கள் அவர்களை நம்பியது மட்டுமே"
நாம் படிக்காமல் பலர் முன்னேறி இருக்கும் கதைகளை பலமுறை கேட்டிருப்போம். அவர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்திருந்தாலும், அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே அவர்களை உயர்த்தி உள்ளது. எனவே, உங்கள் மீதும், உங்கள் இலக்கின் மீதும் நம்பிக்கை வையுங்கள்.
"உங்கள் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் நீங்கள் உங்களை நம்புவது அவசியம் ஆனது"
நமது சமூகமும், கல்வி முறையும் ஒரு மனிதரை மதிப்பெண்கள் வைத்து அளவிடுகிறது. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள் என்பதால் எல்லோராலும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அதேபோல், மதிப்பெண்கள் ஒருவரின் தகுதியை முடிவு செய்யாது என்பதை நாமும், இந்த சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்
Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்