2022ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பெண்களின் கதாபாத்திரத்திற்கு அல்லது பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்களை பற்றி பார்ப்போம்.
பொன்னியின் செல்வன்:
பொன்னியின் செல்வன் பெண்களை மையமாகக் கொண்ட படம் இல்லை என்றாலும் அதில் உள்ள பெண்களின் கதாபாத்திரம் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. படத்தின் மையக்கரு இரு பக்கத்தில் உள்ள, இரு பெண்களை சுற்றிய உள்ளது. அவர்களே பல முடிவுகளை எடுக்கின்றனர் மற்றும் பட இறுதியில் ஆண்கள் அனைவரும் இந்தப் பெண்களுக்கு இடையிலான சதுரங்க போட்டியின் சிப்பாய்களாக இருக்கிறார்களோ என்று தோன்ற வைக்கிறது. திறமையான அரசியல் திட்டங்களை திட்டக்கூடியவராக மற்றும் ராஜதந்திரியாக குந்தவை (த்ரிஷா), அழகான, புத்திசாலித்தனமான, சூழ்ச்சிமிக்க ஒருவராக நந்தினி (ஐஸ்வர்யா ராய்), சுதந்திரமான, தைரியமான, வலிமையான பூங்குழலி (ஐஸ்வர்யா லட்சுமி) இவர்களின் கதாபாத்திரம் அந்த காலத்தில் வாழ்ந்த பெண்களை நினைத்து ஆச்சரியப்பட வைக்கிறது.
அனல் மேலே பனித்துளி:
மதி என்ற ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒரு வலுவான, தைரியமான மற்றும் சுதந்திரமான ஒரு பெண்ணாக நிலை நிறுத்தப்படுகிறார். குற்றவாளிகள் அதிகாரி பதவியில் இருப்பவர்கள் என்று அறிந்தும் அவள் அவர்களுக்கு எதிரே புகார் அளிக்கிறாள். அவளின் ஒரு வீடியோ பொதுவில் வெளியாகும் என மிரட்டிய போதும் அது அவளை நீதிக்காக போராடுவதில் இருந்து தடுக்கவில்லை. அவளுக்கு எதிராக நடந்த கொடூரமான குற்றம் இருந்த போதிலும் அவள் தன்னை ஒரு பலியாக கருதவில்லை. அவள் உயிர் பிழைத்தவள், ஒரு போராளி, மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம்.
கார்கி:
கார்கி பெண்களின் அதிகாரம் பற்றிய படம் அல்ல. ஆனால் பெண்ணின் வாழ்க்கையை சுற்றியுள்ள சிக்கல்களை பற்றிய கதை. நடுத்தர குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்த கார்கி (சாய் பல்லவி) வாழ்க்கையில் உள்ள பொறுப்புகளையும், போராட்டங்களையும் இந்த படத்தில் காண முடியும். தன் குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் ஒரு பெண்ணின் உறுதியையும், தைரியத்தையும், மன உறுதியையும் பார்க்க முடியும். ஒரு சரியான விஷயத்தை செய்ய அவள் எவ்வளவு வேதனைகளையும், உணர்ச்சி மோதல்களையும் அனுபவிக்கிறாள் என்று இந்த படம் நமக்கு காண்பிக்கிறது. படத்தின் முடிவில் நாம் வாழ்நாள் முழுவதும் நமக்கு தெரிந்தவர்களை நம்ப முடியுமா என்று யோசிக்காமல் இருக்க முடியாது.
சாணிக் காயிதம்:
சினிமாவில் பெரும்பாலான எல்லா காட்சிகளிலும் பெண்களை கவர்ச்சியாக காண்பிக்க தான் நினைக்கிறார்கள். இந்த திரைப்படம் அதில் இருந்து சற்று விலகி நிற்கிறது. இதில் பொன்னியின் (கீர்த்தி சுரேஷ்) உடலை விட அவளின் முகபாவனையின் மீது பார்வையாளர்களின் கவனம் செல்கிறது. பொன்னியின் உடல் வெளிப்படாமல் அவள் முகத்தை மட்டும் மையமாக வைத்து பலாத்காரக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இரண்டு பெண்களும் கேமராவுக்கு முன்பும், பின்பும் அவர்களின் வேலையை அற்புதமாக செய்யும் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
O2:
பார்வதி (நயன்தாரா) தன் மகனையும், அவன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒரே ஆக்சிஜன் சிலிண்டரையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. நயன்தாராவின் நடிப்பு இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது. நயன்தாராவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது. தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் வலியை அவரின் நடிப்பின் மூலம் நாம் உணர முடியும். அவரின் விடாமுயற்சியும், உறுதியும் தன் மகனுக்காக உலகத்தைக் கூட எதிர்த்து நிற்கும் ஒரு தாயாக இருக்கும் படி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் சாதாரணமாக சமூகத்தில் இருக்கும் ஒரு பெண்ணைப் போல் பிரதிபலித்திருப்பார். அவரின் பேச்சு, உடை அனைத்துமே சாதாரண பெண்ணின் அடையாளமாக இருந்தது. குறிப்பாக அவரின் வாழ்க்கை முறை, அவர் அணிந்திருக்கும் உடை நடுத்தர குடும்பத்தில் பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளதால் இந்த படம் இயல்பாக அமைந்துள்ளது.
விக்ரம்:
விக்ரம் படத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஆண்களாக இருந்த பொழுது எதிர்பாராத நேரத்தில் டினா என்ற கதாபாத்திரம் பார்வையாளர்களை வியக்க வைத்தது. டினா (சாந்தி) இந்த கதாபாத்திரத்தின் ஸ்கிரீன் டைம் மிகக் குறைவாக இருந்தாலும், அது மிகவும் முக்கியமான ஒரு காட்சியாக அமைந்துள்ளது. சாதாரண ஒரு வேலைக்காரியாக தென்பட்ட கதாபாத்திரம் திடீரென்று ஒரு ஏஜென்ட் ஆக சண்டை போடும் இந்த காட்சி பலருக்கு உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.