வரலாற்றை சுவாரசியமாக்கும் கீர்த்தி(Keerthi)

வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் கீர்த்தி‌. SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவரின் வாழ்க்கை பற்றியும் வரலாற்றைப் பற்றியும் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Devayani
07 Mar 2023
வரலாற்றை சுவாரசியமாக்கும் கீர்த்தி(Keerthi)

Images of Keerthi

வரலாறு மிகவும் முக்கியமானது மற்றும் சுவாரசியமானது. ஆனால் நமது பள்ளி பாடங்களில் பெரும்பாலும் வரலாற்றுப் பாடங்கள் மீது மாணவர்கள் ஆர்வம் இல்லாமல் இருந்திருப்பார்கள். ஏனென்றால் அதனை எடுக்கும் ஆசிரியர்கள் சிலர் அதை சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்திருக்கலாம். சமூக வலைத்தளங்களில் கீர்த்தி என்பவர் வரலாறு பற்றிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் சமூக வலைத்தள பக்கங்களை பார்க்கும் பொழுது இவரைப் போன்று ஒரு வரலாறு நடத்தும் ஆசிரியர் நமக்கு இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு மிகவும் சுவாரசியமாக வரலாற்றில் என்ன நடந்தது என்பதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியம் உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?

உண்மையில் இது நல்ல ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசதி எல்லாம் கிடையாது. வீட்டில் எனக்கு பஸ் சார்ஜ்க்கு கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து தான் நான் ரீசார்ஜ் செய்வேன். அப்படி இருக்கையில் தற்போது நிறைய வசதி இருக்கிறது. இதை வைத்து நாம் தொழில் கூட தொடங்க முடிகிறது. எனவே, இதை ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். நான் வரலாறு பற்றி பேசுவதால் நான் ஒரு நான்கு பேரை அமர்த்தி வரலாறு பற்றிய பாடங்கள் எடுத்தால் யாரும் அதை கவனிக்க போவதில்லை. அதையே நான் டிஜிட்டல் மீடியாவில் பதிவிட்டால் யாருக்கு அது சேர வேண்டுமோ அவர்களை அதை சென்றடைகிறது. யாருக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமோ அவர்கள் இதை பார்க்கிறார்கள். 

நான் ஒரு பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று வரலாறு பாடங்கள் எடுத்தால் அவர்கள் கேட்டே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் கேட்பார்கள். அதுவே டிஜிட்டல் மீடியா என்றால் யாரையும் நான் கட்டாயப்படுத்த தேவையில்லை. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் அதை பார்க்கிறார்கள். ஒரு பத்து பேர் நாம் சொல்லுவதை ஆசையாக கேட்கும் போது நமக்கும் அதை சொல்ல வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். அதனால் டிஜிட்டல் மீடியம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆரம்பத்தில் கேமராவுக்கு முன்பு பேசும்பொழுது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் போகப் போக அது பழகிவிட்டது.

history keerthi

நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றி கூறுங்கள்?

வரலாறு என்பதால் உண்மையாக நடந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வது கடினமானது. ஏனென்றால் பல இடங்களில் இவை தவறாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை நாம் இன்டர்நெட்டில் படித்தால் அது எந்த அளவுக்கு உண்மையானது என்பது தெரியாது. அதனால் நான் அது உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கே நிறைய ஆராய்ச்சிகள் செய்வேன். பெரிய மன்னர்கள் பற்றி நிறைய விஷயங்கள் கிடைக்கும். ஆனால் மக்களுக்கு தெரியாதவர்கள் பற்றி நாம் பேச நினைத்தால் அதற்கான விஷயங்கள் கிடைப்பது கடினம். இதனால் கன்டென்ட் எழுதுவது சிறிது கடினமாகவே இருக்கிறது.

YouTubeல் ஒரு வீடியோ கன்டென்ட் எழுத எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்படும். ரீல்ஸ் சிறிது ஈசியாகவே இருக்கிறது. ரீல்ஸ் வெறும் 30, 40 வினாடிகளுக்கு இருப்பதால் நான் மேலோட்டமாக ஒரு விஷயத்தை சொன்னால் போதும். ஆனால், YouTubeகாக செய்யும்போது மிகவும் கடினமான இருக்கும். 

அதேபோல் கேமரா முன்பு அமர்ந்து வீடியோக்கள் எடுப்பது கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் நான் மிகவும் சத்தமாக பேசிக் கொண்டிருந்தேன். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கேமரா முன்பு இருக்கும்போது என்னால் ஒரு சாதாரணமான உரையாடல் போல் பேச முடியவில்லை. அதன் பிறகு நான் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் வருவது போல கேமராவை பார்த்து பேசாமல் பக்கத்தில் என் சகோதரனை அமர வைத்து அவனைப் பார்த்து அவனிடம் சொல்வது போல் வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தேன். இந்த மாதிரி பதிவிட்ட முதல் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்பொழுதில் இருந்து நான் அப்படியே வீடியோக்களை பதிவிட ஆரம்பித்து விட்டேன்.

புதிதாக கன்டென்ட் கிரியேட் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு மூன்று டிப்ஸ் கொடுங்கள்

1. வீடியோ கிளாரிட்டியாக இருக்க வேண்டும். வெளிச்சம், இடம் போன்ற விஷயங்களை பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இந்த விஷயங்களை நான் தெரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. 

2. சொல்லும் விஷயங்களை எளிமையாக சொல்லுங்கள். டெக்னிக்கலான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் அந்த தொழிலில் இருப்பதால் உங்களுக்கு அதில் உள்ள டெக்னிக்கல் வார்த்தைகள் எல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் சாதாரண மக்களுக்கு அது புரியாது. இதுதான் எனது வீடியோக்களை மக்கள் பார்ப்பதற்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வரலாற்றில் இது போன்ற நிறைய வார்த்தைகள் இருக்கும். நான் புத்தகங்கள் படிக்கும் போது கூட என்னால் ஒரு டிக்ஷனரி இல்லாமல் அதை படிக்க முடியாது. அதனால் என்னால் ஒரு வரலாற்று நிகழ்வை எவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு எளிமையாக தான் எனது வீடியோக்களில் சொல்லுவேன்.

3. கண்சிஸ்டெண்டாக பதிவிடுங்கள். அது உண்மையாகவே உதவுகிறது. ஒரு வீடியோ வைரலான பிறகு அதை அப்படியே விட்டு விடக்கூடாது. வாரத்திற்கு ஒரு நான்கு வீடியோ பதிவிடுகிறீர்கள் என்றால் எல்லா வாரமும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் அதை விட்டு விடக்கூடாது.

கீர்த்தி மேலும் வரலாற்றின் முக்கியத்துவம் பற்றியும் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் Thuglife Thalaivi என்ற Podcastயில் பகிர்ந்திருக்கிறார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click here: Life Journey of Keerthi | Keerthi History | Digital Creator

அடுத்த கட்டுரை