ஏன் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு படிப்பு வேண்டாம், வேலை வேண்டாம், சம்பளம் வேண்டாம், அவர்கள் வீட்டு வேலை செய்து கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை ஆதரிக்கிறது?
அணாதிக்க சமூகம் பெண்களை இதுபோன்று அடிமைப்படுத்தி வைக்க நினைக்கும் காரணம் அது அவர்களுக்கு தரும் சலுகையினால் மட்டுமே. ஒருவேளை பெண் படித்து விட்டால் அவளுக்கு அவள் உரிமைகள் பற்றி தெரியவந்து விடும். அப்பொழுது அவள் இந்த ஆணாதிக்க கொடுமைகளை பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டாள். ஒரு பெண் வேலைக்கு செல்ல ஆரம்பித்தால் அவளால் யார் தயவும் இன்றி தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்துவிடும். அப்படி நம்பிக்கை வந்து விட்டால் ஆண்களை கவனித்துக் கொண்டு, மற்ற வீட்டு வேலைகளை யார் செய்வது? இது போன்ற காரணத்தினால் மட்டுமே பெண்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கப்படுகிறது.
ஆணாதிக்கம் பெண்களின் உரிமையை பறித்துக் கொண்டு அதனால் ஆண்களுக்கு கிடைக்கும் சலுகையை அதிகப்படுத்துகிறது. இது போன்ற விஷயங்களில் இருந்து வெளிவர நினைக்கும் பெண்களுக்கு நிறைய தடைகள் ஏற்படுகிறது.
அயலி வலைத் தொடரில் காண்பித்தது போல ஆண்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், பெண்களை எப்படி நடத்த வேண்டும் போன்ற வரையறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். அதற்கான காரணத்தையும் அதன் பின்னால் உள்ள விளக்கத்தையும் அவர்கள் கேட்பதில்லை. யாரோ ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறினால் அதை அப்படியே பின்பற்றுகின்றனர்.
ஆணாதிக்க விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே ஒரு ஆண் சமூகத்தில் மதிக்கப்படுகிறான் என்று நம்புகின்றனர். இதுவும் ஒரு அளவிற்கு உண்மைதான். எந்த ஆண் இந்த அணாதிக்க பிடியிலிருந்து விலகி பெண்ணுக்கு ஆதரவாக இருந்தாலோ அல்லது பெண்களை சமமாக நடத்தினாலோ இந்த சமூகம் அவனை தாழ்த்தியே நினைக்கிறது. சமூகத்திற்கு பயந்து ஆண்களும் இதுபோன்ற ஆணாதிக்க விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
ஆண்கள் ஆணாதிக்கத்தில் இருக்கும் சலுகையை பார்க்கிறார்களே தவிர அது அவர்களின் வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். பெண்கள் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் மற்றும் பிற பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஆண்கள் தங்களுக்கு நடக்கும் ஹராஸ்மென்ட் மற்றும் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வெளியே கூறினால் இந்த சமூகம் அவர்களை தாழ்மையாக நினைத்து விடும் என்று எண்ணி அதை வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். முதலில் ஆணாதிக்கம் இரு பாலினத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி இந்த ஆணாதிக்க சிந்தனையை ஒழிப்பது?
சமத்துவத்தை மதிக்கும் ஆண்கள் தான் ஆணாதிக்க சிந்தனையில் மூழ்கியிருக்கும் ஆண்களிடம் இதை பற்றி கூற வேண்டும். ஏனென்றால் ஆணாதிக்க சிந்தனை உடைய ஒரு ஆண் பெண்கள் கூறுவதை கேட்கப்போவதில்லை. அப்பொழுது இன்னொரு ஆணால் மட்டுமே ஆணாதிக்க சிந்தனை உடைய ஒரு ஆணை மாற்ற முடியும். அவர்களால் மட்டுமே ஆணாதிக்கத்தின் தீங்கினை மற்ற ஆண்களுக்கு புரிய வைக்க முடியும்.
ஆண்கள் பெண்களை சக மனிதர்களாக நினைக்கும் வரை சமூகத்தில் சமத்துவதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்பிருந்த காலத்தை விட தற்போது நிறைய விஷயங்கள் மாறி உள்ளது. அதேபோல் இனி வரும் காலகட்டத்திலும் நிறைய நேர்மறையாக மாற்றங்கள் நடக்கும் என நம்புவோம்.
முதலில் வீட்டிலிருந்து இந்த பாலின பாகுபாட்டை நாம் ஒழிக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களை பார்த்த தான் கற்றுக் கொள்கிறார்கள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் வேலைகளை பிரித்துக் கொண்டு சமமாக செய்ய வேண்டும். அதேபோல் வீட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளை பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும். இதை மாற்றினாலே இங்கு பல விஷயங்கள் மாறிவிடும்.
Suggested Reading: சமூகத்தில் உள்ள பாகுபாட்டை பற்றி தமிழ் நடிகைகள் கூறும் விஷயங்கள்
Suggested Reading: பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களுடன் இருக்கக் கூடாது?
Suggested Reading: அயலி தொடர்(Ayali webseries) விமர்சனம் மற்றும் எழுப்பும் கேள்விகள்