/stp-tamil/media/media_files/2mwy4gHUIUAPd50NWoi6.png)
முதலில் நாம் மன அழுத்தம்(depression) என்றால் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் அல்லது மனசோர்வு என்பது இப்படித்தான் இருக்கும் என எந்த வரையறையும் இல்லை. அது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடலாம். ஆனால் பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒருவருக்கு அவர்களின் சொந்த உணர்ச்சிகளை புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கக்கூடும், அவர்களின் உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், எதிலும் விருப்பமில்லாமல் எப்பொழுதும் சோர்வாகவே இருக்கக்கூடும்.
பெண்களுக்கு மன அழுத்தம் என்பது சில சமயம் சிறுவயதில் இருந்தே ஏற்படக்கூடும். அதற்கான காரணம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான கண்டிப்பாக இருக்கலாம், வேலை செய்யும் இடங்களில் அழுத்தம் நிறைய இருக்கலாம், சிறுவயதிலேயே திருமண அழுத்தம், குடும்ப வன்முறை அல்லது அருகில் உள்ளவர்களாலேயே அவர்களுக்கு ஏதாவது ஒரு அபாயம் நேர்ந்து இருக்கலாம். இது போன்ற அனுபவங்கள் பெண்களுக்கு பயத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இது போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் இந்த விஷயத்தில் இருந்து மீளுவதில்லை மாறாக இந்த துன்பங்களை கடந்து சென்று விடுகின்றனர். இது அவர்களுக்குள்ளேயே ஒரு குழப்பமாக இருக்கிறது.
பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியவை:
1. Abuse - எந்த வயதிலும், எந்த வகையான துஷ்பிரயோகமும் ஒரு நபரை பாதிக்கும். அது உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ எதுவாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
2. வயது - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எந்தெந்த வயதில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்த சமூகம் தீர்மானித்து வைத்திருக்கிறது. அப்படி அந்த குறிப்பிட்ட வயதிற்குள் அவர்களுக்கு நடக்க வேண்டியது நடக்காமல் இருந்தால், சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்களும், விமர்சனங்களும் ஒரு பெண்ணை மன அளவில் பாதிக்கிறது.
3. குழந்தை வளர்ப்பு - பல இந்திய குடும்பங்களில் குழந்தைகளை நஞ்சு வாழ்ந்த சூழலிலேயே வளர்க்கின்றனர். குறிப்பாக பெண்கள் என்று வரும் போது கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அதிகமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும், ஆணாதிக்க சமூகத்தின் விதிமுறைகளும் மோசமான பின்விளைவுகளை தருகிறது.
4. குடும்ப வன்முறை - குடும்ப வன்முறை ஒரு பெண்ணை உடல் அளவில் மட்டும் இல்லாமல் மனதளவில் நிறைய பாதிக்கிறது. உடம்பில் உள்ள காயங்கள் மறைந்தாலும், அது ஏற்படுத்திய நினைவுகளும், உணர்ச்சியும் மறைவதில்லை.
5. மோதல் - சில சமயம் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை விட நமக்குள் இருக்கும் கேள்விகளும், பிரச்சனைகளும் மன அழுத்தத்தை தரும். அப்படி அவளின் விருப்பமும், குடும்பத்தின், சமூகத்தின் கருத்துக்களும் மோதிக்கொள்ளும் போது எண்ணங்கள் தெளிவற்றதாக இருக்கும். அது ஒருவரின் நம்பிக்கையையும் பாதிக்கும்.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். அதேபோல் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரவும், அதிலிருந்து குணமடையவும் சில வழிகள் உள்ளது.
1. உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் - நீங்கள் நம்புவர்களிடம் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். பெரும்பாலும் மன அழுத்தம் உடையவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் நீங்கள் நம்புவர்களிடம் உங்கள் உணர்ச்சிகளை கூறும் பொழுது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
2. உங்களுக்கான தனிமை நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள் - உங்களுக்கான தனிமை நேரத்தில் நீங்கள் நடைபயணம் செல்வது, உங்களுடன் பேசிக்கொள்வது, இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அந்த நேரத்தில் யாரும் உங்களை தொந்தரவு செய்யாமல் உங்களுக்கான நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
3. உங்களை மகிழ்விக்க கூடிய விஷயங்களை செய்யுங்கள் - மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உங்களுக்கு பிடித்த விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும். அது உங்களை மகிழ்விக்கும். உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்வது, நடனம் ஆடுவது, புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வது, உங்களுக்காக சமைப்பது இப்படி உங்களுக்கு எது மகிழ்ச்சி தருமோ அதை செய்யுங்கள்.
4. எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் - உங்கள் மூளையும், உடம்பும் இளைப்பாற தேவையான நேரத்தை அதற்கு கொடுங்கள். மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது சிலர் தூங்க முடியாமல் தவிக்கலாம் அல்லது நிறைய நேரம் தூங்கலாம். இது இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனவே, நீங்கள் ஆரோக்கியமாக தூங்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் மற்றும் எவ்வளவு நேரம் நீங்கள் ஓய்வு எடுக்கிறீர்கள் என்பதையும் தினமும் கணக்கெடுக்க வேண்டும்.
5. ஆரோக்கியமான உணவு - நாம் உண்ணக்கூடிய உணவு நமது மூளை மற்றும் உடம்பு செயல்பாட்டில் பெரிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் உணவை தவிர்க்காமல் உண்பது மனநிலையை மேம்படுத்தும். சக்கரை, கொழுப்பு மற்றும் உடம்பிற்கு கெடுதலான விஷயங்களை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுக்கு இதைப் பற்றி தெரிந்த ஒரு நிபுணரிடமிருந்து உதவி தேவைப்படலாம். எனவே, மனநல மருத்துவர்களை(mental health expert) சந்திப்பதற்கு தயங்காதிர்கள். ஏனென்றால், இது உங்கள் வாழ்க்கை, உங்கள் சந்தோஷம், உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரு நிபுணரிடம் இருந்து உதவி கேட்பதில் எந்த தவறும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Suggested Reading: மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏழு வழிகள்
Suggested Reading: மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய 7 குறிப்புகள்