சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல பெண்கள் அவர்களின் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டனர். அதில் மகாராஷ்டிராவை சேர்ந்த 40 வயது சாயா ரமேஷ் போர்ஸ் என்பவரும் அங்கீகரிக்கப்பட்டார். கடின உழைப்பினால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் சாயா. அவருடன் நடந்த ஒரு நேர்காணலில் அவர் தொழில் முனைவு பற்றியும் ஒருவரின் அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் பேசியது மட்டுமல்லாமல் பணரீதியாக சுதந்திரம் மற்றும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
சாயா 14 வயது இருக்கும் பொழுது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் 15 வயதில் இருக்கும் பொழுது அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. மேலும், 17 வயதில் இருக்கும் பொழுது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்த வயதில் வேலை செய்வது என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த அவர் தற்பொழுது நெடுந்தூரம் வந்திருக்கிறார்.
"அன்று என் கணவர் வெறும் இருபது ரூபாய் சம்பளம் வாங்கினார். அது குடும்பத்தை நடத்துவதற்கு போதவில்லை. மேலும் தனக்கு மன அழுத்தமாக இருக்கிறது என்று அவர் குடிக்கவும் தொடங்கினார். நான் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் மற்றும் வீட்டுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நான் வீட்டிற்கு வீடு சென்று சமைக்கலாம் என முடிவெடுத்தேன்" என்று நினைவு கூறுகிறார்.
சமையல் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தின் மூலம் அவர் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். வீட்டிற்கு வீடு சென்று சமைத்து அதில் இருந்து வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த தொடங்கினார். ஆனால் அவரின் கணவர் அவரை வேலைக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்த போது பிரச்சனைகள் தொடங்கியது. தனது கணவர் அவரை நிறுத்தினாலும் அவர் அவ்வப்போது தெரியாமல் வேலை செய்து கொண்டு தான் இருந்தார்.
இந்த வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே ஒரு அரசு பள்ளியில் பெண்களுக்கு டைலரிங் கற்றுத் தர தொடங்கினர். சாயா அதில் ஆர்வம் கொண்டு ட்ரைலரிங் கற்றுக்கொள்ள தொடங்கினார். இதற்கு சென்ற அனுபவத்தை பற்றி கேட்ட பொழுது "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னிடம் தைத்து பழகுவதற்கு துணி கூட இல்லை. நான் என் தாயுடைய பழைய காட்டன் புடவையை துண்டு துண்டாக வெட்டி அதில்தான் பிளவுஸ்களை தைக்க கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.
சாயா எல்லா விஷயங்களையும் உடனே கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர். ஒரு வருடத்திற்குள்ளேயே தைப்பதில் உள்ள அனைத்தையும் அவர் கற்றுக் கொண்டார். மேலும் ஒரு முறை ஒரு டிசைனை பார்த்தால் அதை அப்படியே தைக்கக்கூடிய திறமையும் அவருக்கு இருந்தது. "நான் கற்றுக்கொண்ட உடனே ஒரு கடைய ஆரம்பித்தேன், இப்பொழுது நான் ஒரு தொழில் முனைவராக மாறி இருக்கிறேன்" என்று கூறினார்.
டிஜிட்டல் உலகம் எப்படி உதவுகிறது?
சாயா தனது படிப்புகளை சிறுவயதில் இருந்து தொடர முடியவில்லை என்றாலும் தனது குழந்தைகள் தவறாமல் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது அவரின் குழந்தைகள் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும், அவர்கள் தான் சமூக வலைத்தளங்களை பற்றி இவருக்கு கற்று தருகின்றனர். "எனது மகள் எனக்கு அனைத்தையும் கற்றுத் தந்து புதிய ட்ரெண்டுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறாள். நான் டிஜிட்டல் மீடியாவை விளம்பரத்திற்காகவும், பில்களை(bill) பதிவிடுவதற்காகவும் பயன்படுத்துகிறேன், அது எனது வேலையை சுலபமாக்கியிருக்கிறது".
பணரீதியாக சுதந்திரம்:
சாயா தனது கணவரின் பெயரைக் கொண்டு அறியப்படாமல், தனது பெயரின் மூலமாக தனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது ஒரு சாதனை போல் இருக்கிறது என்று கூறுகிறார். "எனக்கென ஒரு அடையாளம் இருக்கிறது. நான் மதிப்பு இல்லாதவளாக பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். எனது கணவரின் பெயர் மூலமாகவே என்னை அனைவரும் அறிந்தனர். ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. பணம் சம்பாதிப்பது எனக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மட்டும் வழங்கவில்லை, ஒரு அடையாளத்தையும் தந்திருக்கிறது" என்று கூறுகிறார்.
பெண்களுக்கான ஆலோசனை:
கடின உழைப்பும், திறமையும் தான் வெற்றிக்கான இரண்டு முக்கிய தூண்கள் என்று அவர் கூறுகிறார். பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, "உங்கள் திறமையை கண்டறிந்து அதனை வளர்த்துக் கொள்ளுங்கள். யாரையும் சார்ந்திருக்காமல் உங்களின் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். பெண்களைப் போன்ற சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இல்லை. நமது மூளையையும், இதயத்தையும் இணைத்து ஒரு விஷயம் வேண்டும் என்று நினைத்தால் அதை நிச்சயமாக அடைய முடியும்" என்று கூறுகிறார்.
Suggested Reading: பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை எனது வாழ்வில் ஏற்படுத்தியது - சரிதா ஜோ
Suggested Reading: "இந்த சமூகம் அனைவருக்கும் பொதுவானது" திருநங்கை மயூரா கணேசன்
Suggested Reading: முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan
Suggested Reading: அபிராமி வெங்கடாசலம் எப்படி உருவ கேலியை கடந்தார்