"இந்த சமூகம் அனைவருக்கும் பொதுவானது" - திருநங்கை Mayura Ganesan

இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளது. இந்த சவால்களை எல்லாம் கடந்து தற்போது வெற்றி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் மயூரா கணேசன் வாழ்க்கை கதையை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Devayani
10 Mar 2023
"இந்த சமூகம் அனைவருக்கும் பொதுவானது" - திருநங்கை Mayura Ganesan

Image of Mayura Ganesan

இந்த சமூகத்தில் பெண்கள் வாழ்வதற்கு நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆணாக இருந்து திருநங்கையாக மாறியவர்களுக்கு இந்த கஷ்டம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த தடைகளை எல்லாம் கடந்து தற்போது திருநங்கைகள் அவர்களின் அறிவு மற்றும் திறமையினால் சாதனை படைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கை பயணம் எளிமையானதாக ஒருபோதும் இருந்ததில்லை. பல சவால்களை தாண்டியே அவர்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

இப்படி பல தடைகளை தாண்டி மயூரா கணேசன் என்னும் திருநங்கை ஒரு வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக மட்டும் இன்றி இருப்பது மட்டுமின்றி ஒரு தொழிலையும் நடத்தி வருகிறார். இவர் ஜோஸ் டாக்கில் தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பேசியபோது “இந்த சமூகம் அனைவருக்கும் பொதுவானது” என்று கூறி தனது கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

தனது உடலில் ஏற்படும் மாற்றங்களால் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் பல கஷ்டங்களை இவர் அனுபவித்து உள்ளார். இருப்பினும் அதை எல்லாம் கடந்து யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ஆகவும் இருந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே நிறைய எதிர்ப்புகளை சந்தித்த இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தனது பெற்றோர்களிடம் "நான் தனியாக செல்கிறேன்" என்று சவால் விட்டு வீட்டை விட்டு கிளம்பி உள்ளார்.

transgender mayura ganesan

பெற்றோர்களின் அரவணைப்பில் வளர்ந்த ஒரு குழந்தைக்கு இந்த சமூகம் நிறைய சவால்களை கொடுத்தது. வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கேலி, கிண்டல், பயம் என அனைத்தையும் இவர் கடந்து வந்துள்ளார். அப்பொழுது இவருக்கு இருந்த எண்ணமெல்லாம் வீட்டை விட்டு வந்து விட்டோம், இனி கஷ்டப்பட்டால் தான் எதையாவது சாதிக்க முடியும் என்பதால் கஷ்டப்படுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார். 

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தங்குவதற்கு இடம் இல்லாததால் தான் நடனம் கற்றுக் கொண்ட இடத்திலேயே ஒரு சில மாதங்கள் தங்கியுள்ளார். பிறகு இவருக்கு ஒரு வேலை கிடைத்தது அந்த வேலையில் இவரை பலர் ஊக்குவித்துள்ளனர். அப்பொழுது "நீ உயர்ந்தால் இந்த திருநங்கை சமூகம் உயர்ந்த மாதிரி" என்று கூறி அவரை பலர் ஊக்கப்படுத்தினர். வேலை செய்யும் இடத்தில் இவர் நன்றாக வேலை பார்த்து பலமுறை பாராட்டுகளை பெற்றுள்ளார். எனவே, இவருக்கு கீழே வேலை செய்வதற்காக ஒரு குழுவையே அவர்கள் அமைத்தனர். இப்படி தனது வேலையில் கவனம் செலுத்தி அறிவு மற்றும் திறமையினால் அன்று வேலை கிடைக்குமா? இல்லையா? என்ற யோசனையில் இருந்த இவர் தற்போது நல்ல இடத்திற்கு வளர்ந்துள்ளார்.

அங்கு வேலை செய்யும்போதே பலர் இவருக்கு தொழில் முனைவு ஆற்றல் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். அப்பொழுது அவர் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தை விட்டு சமூகத்தை வெளியே சென்று வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று எண்ணி அடுத்த நிறுவனத்திற்கு மாறியுள்ளார். ஆனால் கொரோனாவின் காரணத்தினால் அவரால் அதை தொடர முடியவில்லை.

Mayura ganesan

அதன் பிறகு தான் ஒரு வங்கியில் இவருக்கு அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை கிடைத்துள்ளது. திறமைக்கு பாலினம் முக்கியமில்லை மற்றும் திருநங்கை என்பதால் ஒருவரின் திறமை மறுக்கப்படக்கூடாது என்றும் அவர் நம்புகிறார். இந்த வேலைகளில் இருந்து கிடைத்த அனுபவம் மற்றும் நம்பிக்கையுடன் தொழில் முனைவராக வேண்டும் என்ற கனவை அவர் நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்பட்டார். அதற்காக பல வங்கிகளுக்கு சென்று லோன்கள் கேட்டுள்ளார், அதில் பல நிராகரிக்கப்பட்டது. 

பிறகு கையில் இருந்த காசை வைத்து தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்தபொழுது ஒருவர் இவரைக்கொரு தள்ளு வண்டியை தந்துள்ளார். அப்பொழுது இட்லி கடை போடலாம் என நினைத்தால் அதற்கான ஆற்றல் இவருக்கு இல்லை என முடிவெடுத்து ஒரு ஜூஸ் கடையை அந்த தள்ளு வண்டியில் ஆரம்பித்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை வைத்து தேவையான பொருட்களை வாங்கி ஆரம்பித்த இந்த தொழிலுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த வெற்றிக்கான காரணம் என்னவென்றால் இவர் தனது இலக்குகளை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக அதை அடைவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். ஒரு சமயத்தில் இவர் வேலை வேண்டுமென பலரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், தற்போது இவரிடம் சிலர் வேலை கேட்கும் அளவிற்கு இவர் வளர்ந்துள்ளார். 
மேலும் வாழ்க்கை என்றால் ஒரு வட்டம் அதில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஒரு விஷயத்தை ஆரம்பிப்பது தான் முக்கியம் என அவர் கூறுகிறார். மேலும் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஜோஷ் டாக்கில் பேசிய போது கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரை