வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறந்த சரண்யாவுக்கு அவரின் பெற்றோர்கள் கொடுத்து பெரிய பரிசு கல்வியாகும். சரண்யாவின் பெற்றோர்கள் மிகவும் கடினமாக உழைத்து அவரை ஆங்கில வழி கல்வியில் படிக்க வைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரண்யா படிப்பது மூலம் ஒரு நாள் அவர்களின் வாழ்க்கை மாறும் என்று நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் படி சரண்யாவும் நன்கு படிக்கும் ஒரு மாணவராகவே இருந்தார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாவது இடமும், 12ஆம் வகுப்பில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்ற இவரை அனைவரும் ப்ரொபஷனல் டிகிரி படிக்குமாறு அறிவுரை கூறினார்கள்.
குடும்ப சூழ்நிலைக்கு அது நிறைய கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அவர் எண்ணினாலும் பிறகு கவுன்சிலிங் மூலம் இன்ஜினியரிங் முழு ஸ்பான்சர்ஷிப் உடன் படித்து முடித்தார். படித்து முடித்த உடனே ஒரு MNC கம்பெனியில் வேலையும் பெற்றார். அவரின் பெற்றோர்கள் பட்ட கஷ்டத்திற்கு இவருக்கு நல்ல ஒரு வேலை கிடைத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். நல்ல வேலை, மாத மாத சம்பளம் என இவரின் குடும்பம் அடுத்த நிலைக்கு சென்றது.
2013இல் பெற்றோர்களின் சம்மதத்துடன் சரண்யாவிற்கு காதல் திருமணம் நடந்தது. 2014இல் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒரு தாய்க்கு எப்பொழுதும் தனது குழந்தைக்கு நல்ல விஷயங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அப்படித்தான் சரண்யாவும் குழந்தைக்கு எது கொடுப்பதாக இருந்தாலும் அந்த பொருள் எப்படி செய்யப்பட்டது என பார்த்து கவனமாக இருந்தார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் இவர் சிறந்து இருந்தார். அதன் மூலம் நிறைய ஆர்கானிக் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்த தொடங்கினார்.
2016இல் அவரின் கம்பெனியில் வெளியூருக்கு ஒரு ட்ரெய்னிங்காக செல்ல வேண்டி இருந்தது. அப்பொழுது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்ததார். டாக்டர்களின் அனுமதி பெற்று அந்த ட்ரெயினிங் ப்ரோக்ராமில் கலந்து கொண்டார். ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு இருந்து திரும்பி வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பேஸ்புக்கின் மூலம் அங்கு ஒரு நர்சை கண்டுபிடித்து பக்கத்தில் உள்ள மருத்துவரை பார்த்திருக்கிறார். மருத்துவர் ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் மீண்டும் பயணிக்கலாம் என்று கூறினார்.
ஆனால், அடுத்த நாள் இவருக்கு குழந்தை பிறந்தது. சமூக வலைத்தளங்களின் மூலம் நண்பர்கள் இவருக்கு உதவி செய்தனர். மேலும், கம்பெனியும் அவருக்கு உதவியது. அதனால் சில மாதங்கள் குழந்தையுடன் அங்கேயே இருந்து குழந்தை உடல் நிலை முன்னேறிய பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். முன்பே, அவர் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார். ஆனால், இந்த முறை முற்றிலும் அனைத்தையும் ஆர்கானிக் ஆக மாற்ற எண்ணினார். எனவே, இவரின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உறவினர்களும், நண்பர்களும் இவரிடம் எனக்கும் இந்த பொருட்களை வாங்கி கொடு என்று கேட்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் இவருக்கு தானே ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று தோன்றி திணை ஆர்கானிக்(Thinai Organics) தொழிலை தொடங்கினார்.
2020ல் ஊரடங்கில் இருந்தபோது வேலையை விட்டு அவரின் தொழிலை(Thinai Organics) முழு நேரமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். மடிப்பாக்கத்தில் முதல் கடையையும் திறந்தார். பத்து பொருட்களுடன் ஆரம்பித்த தினை ஆர்கானிக் தற்போது 500 பொருட்களுக்கும் மேலே வளர்ந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இவர்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.
கலப்படமில்லாத, இரசாயனங்கள் கலக்கப்படாத பொருட்களை வழங்குவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. அவரின் MNC வேலையை விடும்பொழுது அவரின் தாய் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் இது சரியான முடிவா என்றும் யோசித்தார். ஆனால், தற்போது சரண்யா தினை ஆர்கானிக் ஆரம்பித்த பிறகு ஒரு நோக்கத்துடன் செயல்படுவதை பார்த்தும், மேலும் அவருக்கு கிடைக்கும் விருதுகளை பார்த்தும் தன் மகள் சரியான ஒன்றை தான் செய்து வருகிறாள் என்பதை புரிந்து கொண்டு அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சரண்யாவின் இந்த பயணத்தில் அவருக்கு மேலும் உறுதுணையாக இருந்தது அவரின் கணவர். ஒரு பக்க பலமாக இருந்து சரண்யாவை ஆதரித்துள்ளார். இப்பொழுது தினை ஆர்கானிக் கடைகளை மற்ற இடங்களுக்கு விரிவு படுத்துவதே அவர்களின் கனவாக உள்ளது.
Suggested Reading: Thaai Herbals என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana
Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை Nandhini - Entrepreneur
Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்