தொழில் முனைவர் அஹானாவின் ஆரோக்கியமான சிற்றுண்டி பயணம்

Devayani
22 Dec 2022
தொழில் முனைவர் அஹானாவின் ஆரோக்கியமான சிற்றுண்டி பயணம்

ராஜஸ்தானில் உள்ள பாரத்பூர் என்ற சிறிய நகரத்தில் பிறந்த அஹானா ஐஐடியில்(IIT) படித்த பிறகு ஹார்ட்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் (Harvard Business School) படித்துள்ளார். அப்பொழுதுதான் அவர் தனது நோக்கத்தை கண்டுபிடித்து உள்ளார். எனவே, இந்தியாவுக்கு திரும்பிய பின் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான சிற்றுண்டியை அறிமுகப்படுத்த வேண்டும் என தீர்மானம் செய்தார்.

இந்த சிந்தனை அவருக்கு எப்படி வந்தது:
அவர் பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு வீட்டில் இருக்கும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை உண்ணுவாராம். அதனால் அவருக்கு அடிக்கடி உடல்நல குறைவு, அதிக எடை போடுதல் போன்ற பிரச்சனைகள் வந்துள்ளது. இந்த யோசனை வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, சர்க்கரை இல்லாத சத்தான பொருட்களை தயாரிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளார்.

அவர் Harvardயில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் வெளிநாட்டு மக்களுக்கு நிறைய ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள் இருப்பதை கவனித்துள்ளார். அதே சமயத்தில் அவரது வீட்டில் சுவையாக இருக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் இந்தியாவில் கிடைக்கவில்லை என கூறுவதையும் அவர் கவனித்துள்ளார். இது அவருக்கு ஏன் இந்திய மக்கள் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை உண்ண வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. எனவே, 2019 ஆம் ஆண்டு ஓபன் சீக்ரெட் (Open Secret) என்ற பெயரில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை உருவாக்க தொடங்கியுள்ளார்.

2026 ஆம் ஆண்டிற்குள் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆரோக்கியமான உணவு இந்தியாவில் இருக்கும் என கூறுவதோடு, அஹானா இந்தியாவில் தான் அதிக ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் இருப்பதாகவும் கூறுகிறார். 

தொழில் முனைவு குறிப்புகள்:
ஒரு தொழில் முனைவராக வரும் சவால்களை புறக்கணிக்க கூடாது. தொழில் முனைவோர்கள் சவால்களை வாய்ப்புகளாக பார்க்கவில்லை என்றால் அவர்களால் வளர முடியாது. உங்கள் நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அவரின் பெரிய உத்வேகமாக அவர் தாயைப் பார்க்கிறார். அவர் தாய் ஒரு தனியான பெற்றோராக அவரை வளர்க்க நிறைய சவால்களை சந்தித்துள்ளார். அவரின் சிறிய கிராமத்தில் ஒரு பெண்ணிற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள நிறைய சவால்களை சந்திக்க நேரிட்டது. அப்படி சவால்களை சந்திப்பது மூலமே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவரது இந்த ஓபன் சீக்ரெட் தாய்களுக்காக அர்ப்பணிக்கிறார். ஏனெனில், குழந்தைகளுக்கு கடையில் விற்கும் உணவுகளை தருவதற்காக தாய்மார்களை இந்த சமூகம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

சிற்றுண்டிகள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சுவை நன்றாக இல்லை எனில் மக்கள் அதை வாங்க போவதில்லை என்று அஹானா கூறுகிறார். எனவே, சுவையினும் அவர்கள் சமமான கவனத்தை செலுத்த வேண்டும்.

அவர் தொழிலுக்கான சவால்கள் கோவிட் காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. சற்றே தொடங்கிய ஒரு புதிய தொழிலுக்கு டிஜிட்டல் ஒரு பெரிய உதவியாக இருந்தது. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது Google Hangout மூலம் மற்ற நபர்களை தொடர்பு கொள்வது எளிமையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

சிறந்த பணி இடத்தை உருவாக்குகிறார்:
அஹானா ஓபன் சீக்ரெட் மதர்ஸ் ப்ரோக்ராம் (Mother's Program) என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தை ஆரம்பித்த சில நாட்களிலேயே 50 தாய்மார்களுக்கு மேல் இதில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஹானா உள்ளூர்களில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவது முன்னுரிமையாக வைத்திருக்கிறார்.
அவர் பொருட்களை உற்பத்தி செய்ய சரியான இடங்களை தேடிக் கொண்டிருந்த பொழுது சுகாதாரமற்ற மோசமான கழிப்பறைகளை கொண்ட ஒரு இடத்தை அவர் பார்த்துள்ளார். அவருக்கு வேலை செய்பவர்களுக்கு ஒரு நல்ல சுத்தமான இடத்தை தருவது முன்னுரிமையாக இருந்தது. பெண்கள் தொழில் முனைவராக இருப்பது சின்ன சின்ன விஷயங்களையும் கவனத்துடன் பார்க்க வைக்கிறது. இந்தியாவில் இது போன்ற சுகாதாரமற்ற கழிப்பறைகள் பிரச்சினை இன்றும் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக தான் இருந்து வருகிறது.

அஹானாவின் ஆலோசனை:
ஒரு இளம் பெண் ஒருமுறை அஹானாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு பெண் தொழில் முனைவரை பார்ப்பதற்கு எவ்வளவு உத்வேகமாக இருக்கிறது என்பதை எழுதி இருந்தார். அந்த கடிதம் அஹானா எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது என்பதை உணர வைத்தது என்று அவர் கூறுகிறார்.

ஒரு சிறிய நகரத்தில் பிறந்த ஒரு பெண்ணாக பல சவால்களையும், பாலின பாகுபாடுகளையும் கடந்து அவரின் கனவை நிறைவேற்றியுள்ளார். அவரை போன்றவர்களுக்கு அஹானா கூறுவது, "யார் உலகத்தை மாற்ற முடியும் என நம்புகிறார்களோ, அவர்களாலே மாற்றத்தை உருவாக்க முடிகிறது. நான் உங்களை பெரிய கனவை காண சொல்லுவேன். அதற்கான உத்வேகத்தை உங்களுக்குள் உருவாக்குங்கள். நீங்கள் நிச்சயமாக அதற்கான வழியை அடைவீர்கள். என்னால் செய்ய முடியும் என்றால் உங்களாலும் முடியும்" என்று கூறி விடை பெற்று கொள்கிறார்.

Read The Next Article