நம்மில் பலர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், யாரையும் சார்ந்து இல்லாமல் சுதந்திரமாக இருப்பதற்கு இந்த நான்கு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரமாக இருப்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு அடிப்படை திறன்கள் பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. பணம் சம்பாதிப்பது:
பணம் சம்பாதிப்பது நமது வாழ்க்கைக்கு தேவையான, முக்கியமான ஒன்று. பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது. ஆனால், நாம் வாழ்வதற்கு பணம் அவசியமாகிறது. அதனால், நீங்கள் பணம் சம்பாதிக்க கூடிய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று இருக்கும் காலகட்டத்தில் நீங்கள் நிறைய விதங்களில் பணம் சம்பாதிக்கலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் பணத்தை சம்பாதிக்க முடியும்.
ஆனால், இதில் நீங்கள் முக்கியமாக கருத வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பதாகும். முன்பை விட தற்போது நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல் மீடியம் மூலமாக இருந்த இடத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் வசதிகள் தற்போது இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கிய தேவையாக இருப்பது உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு அதை எப்படி பணமாக மாற்றலாம் என்று யோசிக்க வேண்டும்.
2. சமைப்பது:
வாழ்வதற்கு தேவையான அடிப்படை திறன்களில் சமைப்பதும் ஒன்றாகும். உணவு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொழுது நாம் அனைவரும் சமைக்க கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. இதற்காக நாம் சமையல் கலையை கற்றுக்கொண்டு எல்லாவித உணவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த ஒரு சில உணவுகளை நீங்கள் சமைக்க கற்றுக் கொள்வது நல்லது. உங்களுக்கு அதை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது யாரையும் எதிர்பார்க்காமல் நீங்களே அதை செய்து சாப்பிடலாம்.
3. வீட்டு வேலை:
அடிப்படை வீட்டு வேலைகளான சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் ஒரு மனிதனின் அடிப்படைத் திறன்களில் அடங்கும். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் பெரும்பாலும் நோய்கள் இல்லாமல் இருக்க முடியும். அது மட்டும் இல்லாமல் சுத்தமான ஒரு இடத்தில் இருப்பது நமது மனநிலையையும் மேம்படுத்தும். எனவே, இந்த திறனை கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.
4. சுய அன்பு(self love):
நமக்கு யாரையாவது பிடித்திருந்தால் நமது கண்களுக்கு அவர்கள் அழகாக தெரிவார்கள் என்று கூறுவர். நீங்கள் உங்களை கண்ணாடியில் பார்க்கும் பொழுது உங்களுக்கு அழகாக தெரியவில்லை என்றால் உங்களிடம் சுய அன்பு(self love) என்பது குறைவாக இருக்கிறது என்பது அர்த்தம். முதலில் நாம் மற்றவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்ப்பதற்கு முன்பு நமக்கு நாமே அதை பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களிடம் அன்பாக இருந்தீர்கள் என்றால் மற்றவர்களின் கருத்துக்கள் உங்களை பாதிக்காது.
இந்த நான்கு திறன்களில் மிகவும் முக்கியமாக இருப்பது பணம் சம்பாதிப்பது தான். பலர் பணம் சம்பாதித்தால் சமைப்பதற்கும், வேலை செய்வதற்கும் ஆட்கள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுவர். அதேபோல் பணம் இருந்தால் உங்களுக்கு பிடித்த விஷயங்களை வாங்கி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்த உலகத்தில் எப்பொழுது என்ன நடக்கும் என்பது நிச்சயம் இல்லாத ஒன்று.
உதாரணத்திற்கு நீங்கள் கொரோனாவை எடுத்துக் கொள்ளலாம். அப்பொழுது உங்களிடம் பணம் இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வருவது கடினமான சூழ்நிலையாக இருந்தது. அதேபோல் ஒருவரை ஒருவர் தள்ளி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்படி ஒரு சூழலை மறுபடியும் வராது என்று எந்த ஒரு நிச்சயமும் இல்லை. அதனால், இந்த நான்கு அடிப்படை வாழ்க்கை திறன்களை நீங்கள் கற்றுக் கொண்டால் யாருடைய உதவியும் இல்லாமல் உங்களால் சுதந்திரமாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்
Suggested Reading: காதல் உறவில் உள்ள ஐந்து அபாயங்கள்
Suggested Reading: ஏன் உங்கள் காதல் உறவை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது?
Suggested Reading: Toxic relationshipஇல் இருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்