அனைவருக்கும் ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதற்காக சில சமயங்களில் நாம் ஆரோக்கியமற்ற உறவுகளில் மாட்டிக்கொள்கிறோம். நச்சு வாய்ந்த உறவு என குறிப்பிடுவது காதல் அல்லது திருமண உறவில் இருப்பது மட்டுமல்ல அது நண்பர்களாகவும் இருக்கலாம், குடும்பத்தினராகவும், இருக்கலாம் அல்லது வேலை செய்யும் இடங்களிலும் நச்சு வாய்ந்த நபர்களாகவும் இருக்கலாம்.
நஞ்சு வாய்ந்த உறவு என்பது துரோகங்கள், ஏமாற்றுதல், தேவையற்ற தீர்ப்புகள், தாழ்த்தி நினைப்பது, அடிப்பது, தகாத வார்த்தைகளில் ஏசுவது போன்றவற்றை அறிகுறிகளாக கொண்டிருக்கும். நமது வாழ்க்கையில் இது போன்ற நபர்களை தவிர்ப்பது கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் இவர்களை தவிர்ப்பது நமது வாழ்க்கைக்கு நன்மையை அளிக்கும்.
நச்சு வாய்ந்த உறவில் இருந்து வெளியேற 7 வழிகள்
1. தொடர்பை நிராகரி:
ஒரு உறவு முடியும் பொழுது அவர்களுடன் எல்லாவித பேச்சு தொடர்பை நிறுத்துவது மிகவும் முக்கியம். ஏனென்றால், அவர்களுடன் தொடர்பில் இருப்பது மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். சில சமயம் உங்களை உணர்ச்சி ரீதியாக மிரட்டியும், பயமுறுத்தியும் அவர்கள் உங்களை அச்சுறுத்தலாம். நீங்கள் ஒருவரை விட்டு விலக நினைத்தால் அவரிடத்தில் எந்த விதத்திலும் பேச்சு வார்த்தைகள் வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை உங்களுக்கு குழந்தை இருந்து அந்த குழந்தைக்கு இரண்டு பெற்றோரும் தேவைப்படும் சூழ்நிலைகள் இருந்தால் அதற்காக குழந்தைகளை பற்றி மட்டும் பேசுவது நல்லது.
2. உங்களுக்கான ஆதரவை உருவாக்குங்கள்:
ஒரு உறவில் இருந்து வெளியேறிய பிறகு அது சோகம், குழப்பம், தனிமை, அழுத்தம் போன்ற பல உணர்ச்சிகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். அது மட்டும் இன்றி பணரீதியாகவும், மற்ற விஷயங்களும் உறவிலிருந்து வெளிவரும் பொழுது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு உங்களுக்கான ஆதரவை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அது ஏன் கடினமாக இருக்கிறது என்று நினைப்பதற்கு பதிலாக உங்களை எப்படி மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஆராய்ச்சியின் படி இது போன்ற நேரங்களில் குடும்பங்கள் அல்லது நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவது உங்கள் அழுத்தத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
3. உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள்:
இந்த உறவு முடிந்ததற்கான காரணம் நீங்கள் பலமுறை முயற்சித்து பார்த்தும் உங்களின் துணையின் குணங்களில் மாற்றம் ஏற்படாததால் தான் இருக்கும். அந்த வகையில் பார்க்கும்போது இதற்கு நீங்கள் பொறுப்பற்றவர் என்பதை உணர வேண்டும். அதேபோல் உங்கள் துணை குணங்களை மாற்றிக் கொள்வதாக தெரிந்தால் அது இந்த உறவு முடிந்து போன அதிர்ச்சியில் தான் இருக்குமே தவிர நீங்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்தால் உங்கள் துணை மீண்டும் பழைய குணங்களை காட்ட தொடங்கலாம். எனவே, ஒரு உறவில் இருந்து வெளிவர வேண்டும் எனில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
4. சமூக வலைத்தளங்களில் அவர்களை பின்தொடராதீர்கள்:
பிரிந்த உங்கள் துணையின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்வதும், அவர்கள் பதிவிடுவதை பார்ப்பதும் உங்கள் பழைய ஞாபகங்களை தூண்டும். அதனால் அவர்களை எல்லா வழிகளிலும் பிளாக்(block) செய்ய வேண்டும். இதை செய்வது மூலம் நீங்கள் அதிகமாக யோசிப்பதை தவிர்க்க முடியும். மேலும், அந்த உறவில் இருந்து முழுமையாக வெளிவர உதவும்.
5. இந்த நிலையில் இருந்து மாற தேவையான விஷயங்களை செய்யுங்கள்:
இந்த நிலையில் இருந்து உங்கள் வாழ்க்கையை நல்லபடி மாற்றிக் கொள்வதற்கு தேவையான விஷயங்களை செய்ய தொடங்குங்கள். உங்களுக்கு வேலை இல்லை என்றால் வேலை கிடைப்பதற்காக என்ன படிக்க வேண்டும், அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசியுங்கள். ஏனென்றால், பணரீதியாக சுதந்திரமாக இருப்பது தான் உங்களை உண்மையாக சுதந்திரமாக வைத்திருக்கும்.
6. உங்களுக்கு தேவைப்பட்டால் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்:
உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உங்கள் நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் உங்கள் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம் அல்லது நிபுணரிடம் பேசுவது உங்களுக்கு பயன் அளிக்கலாம். நிபுணர்களுடன் ஆலோசிப்பது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும். மேலும், அவர்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிகளையும் கூறுவர்.
7. எண்ணங்களை எழுத தொடங்குங்கள்:
நமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எழுதும் பொழுது, முன்பைவிட மோசமாக உணரலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆரம்பத்தில் உங்கள் உணர்ச்சிகளை எழுதும் பொழுது பதட்டம், பயம், அழுகை, வருத்தம் என அனைத்தும் கலந்திருக்கும். ஆனால், ஆராய்ச்சியின் படி சில வாரங்கள் நீங்கள் இதை செய்து வந்தால் மனரீதியாக உங்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை நிரூபித்துள்ளனர்.
Suggested Reading: மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
Suggested Reading: மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள ஐந்து எளிமையான வழிகள்
Suggested Reading: உடனே மருத்துவரை சந்திப்பதற்கான பத்து அறிகுறிகள்
Suggested Reading: மாதவிடாய் வலியை (period cramps) போக்கும் 6 சாறுக்கள்