/stp-tamil/media/media_files/9xXE7VLnDyuxHc2cQcvU.png)
பெற்றோர்கள் அறிந்தும் அறியாமலும் குழந்தைகளை வளர்க்கும் போது அல்லது அவர்கள் முன் இருக்கும்போது சில தவறுகளை செய்கின்றனர். நீங்கள் குழந்தைகளுக்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. நல்ல முன் உதாரணமாக இருங்கள்:
குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் கற்று கொள்கிறார்கள். மனித இயல்பின் படி பெரும்பாலும் மற்றவர்களின் சைகை, செயல் இவை அனைத்தையும் கவனித்து நமக்கு ஏற்றது போல அதை பயன்படுத்துவோம். எனவே, குழந்தை மற்றவர்களை மதிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் அவர்கள் முன் மற்றவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களின் ஒவ்வொரு செயலையும் மிக கவனமாக கவனிப்பார்கள். அதனால், அவர்கள் முன் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். எனவே, குழந்தைக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக இருங்கள்.
2. பிள்ளைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருங்கள்:
குழந்தைகளுக்கு எப்போதும் பாதுகாப்பாக நீங்கள் இருப்பீர்கள் என்று அவர்கள் உணர வேண்டும். சிறுவயதில் பிள்ளைகள் தவறு செய்வது இயல்புதான். ஆனால் அதைப் பெற்றோர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பது தான் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவை தீர்மானிக்கிறது. நீங்கள் குழந்தை உங்களிடம் அவர்களின் தவறை கூறும் பொழுது மிகக் கடுமையாக நடந்து கொண்டாலும் அல்லது அதனை கண்டுக்காமல் விட்டாலும் அவர்கள் செய்யும் தவறுகளை உங்களிடமிருந்து மறைக்க தொடங்குவர். அது மிகவும் ஆபத்தான ஒன்றாக கூட முடியலாம். எனவே, குழந்தைகளை கண்டிக்கும்போது அவர்கள் உங்களை வெறுக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
3. குழந்தைகளிடம் அன்பை காட்டுங்கள்:
நீங்கள் குழந்தை மேல் அன்பாக இருக்கிறீர்கள் என்பதை காட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தர வேண்டும் என்று அர்த்தமில்லை. அவர்களை அணைத்துக் கொள்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது, விளையாடுவது, சேர்ந்த சாப்பிடுவது அவர்கள் பேசுவதை கவனிப்பது அவர்களின் பிரச்சினையை கேட்டு தெரிந்து கொள்வது, இந்த மாதிரியான செயல்கள் செய்வதும் அன்பின் வெளிப்பாடு தான். மேலும் குழந்தைகள் இதையே எதிர்பார்க்கின்றனர். இதை செய்வது மூலம் ஆக்சிடாக்சின் என்ற மகிழ்ச்சியை தரும் ஹார்மோன் வெளியாகிறது. டான் படத்தில் வரும் அப்பா போல குழந்தைகள் முன் கடுமையாக நடந்து கொண்டு, அவர்கள் பின் அக்கரையாக இருப்பதற்கு பதிலாக அவர்கள் மீது உள்ள அன்பை வெளிப்படையாக அவர்களிடம் காட்டுங்கள். அது உங்கள் உறவை வலுவாக்கும்.
4. கைபேசி மற்றும் மற்ற கேஜேட்களை பயன்படுத்தாதீர்கள்:
இந்த காலத்தில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்று தான் வருத்தப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு அந்த பழக்கம் எப்படி வந்தது? குழந்தைகள் முன் பெற்றோர்கள் அதை பயன்படுத்துவதனாலும், பெற்றோர்கள் குழந்தையின் கவனத்தை ஈர்க்க அவர்களின் கையில் கைபேசி கொடுத்ததினாலும். எனவே, குழந்தைகள் உங்களை சுற்றி இருக்கும் பொழுது கைபேசி மற்றும் பிற கேஜேட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதேபோல் அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைப்பதற்காக கைபேசியை அவர்களிடம் கொடுத்து பழகாதீர்கள்.
5. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்:
ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். அதே போல் தான் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி திறமை மற்றும் தனித்தன்மை இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது அது அவர்களின் தன்னம்பிக்கையையும், தனித்துவத்தையும் பாதிக்கும். மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பிடும் போது தங்களை தாழ்மையாக நினைத்துக் கொள்வர். எனவே, உங்கள் குழந்தை எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோரை மற்ற பெற்றோர்களுடன் ஒப்பிடுவதில்லை. அதே போல் நீங்களும் அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்துவத்தை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.