இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்படம் கலைஞர் - Rathika Ramasamy

இந்தியாவில் முதல் பெண் வனவிலங்கு புகைப்பட கலைஞரான ராதிகா ராமசாமி பற்றி தெரிந்து கொள்ளவும் அவர் கூறிய ஆலோசனை பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து படியுங்கள்.

Devayani
28 Feb 2023
இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்படம் கலைஞர் - Rathika Ramasamy

Picture of Rathika Ramasamy

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு ஆணுக்கான வேலையாக இந்த சமூகம் பார்க்கிறது. அதுவும் காட்டுக்குள் வாழும் மிருகங்களையும், பறவைகளையும் புகைப்படம் எடுப்பது மிகவும் சவாலான காரியம் என்பதால் அதை ஆண்களால் மட்டும் தான் சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணமும் இந்த சமூகத்தில் உள்ளது. பல பெண்கள் சமூகத்தில் பெண்களால் செய்ய முடியாதென்று கூறியதை செய்து சமூக பாகுபாட்டினை உடைத்திருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்பட கலைஞர் ராதிகா ராமசாமி.

யார் இந்த ராதிகா ராமசாமி(Rathika Ramasamy)?

தேனியில் பிறந்து வளர்ந்த இவர், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இவரின் தந்தை இவருக்கு ஒரு கேமராவை வாங்கி தந்துள்ளார். அப்பொழுது இவர் நிறைய புகைப்படங்களை எடுத்துள்ளார், அதன் மீது இவருக்கு ஆர்வமும் அதிகரித்துள்ளது. தந்தை ராணுவத்தில் வேலை செய்வதால் அவ்வப்போது இவர் பயணத்திலும் ஈடுபட்டார். அப்பொழுது போகும் இடங்களில் புகைப்படம் எடுத்து அதை பார்த்து மகிழ்வார். 2003இல் அவருக்கு டிஜிட்டல் கேமரா ஒன்று அறிமுகமானது. அப்பொழுது ராஜஸ்தான் பரத்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் பறவைகளை புகைப்படம் எடுத்ததற்கு பிறகு இவருக்கு பறவைகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

பறவைகளை புகைப்படம் எடுப்பது இவருக்கு மிகவும் பிடித்திருந்தால், அதை தொடர்ந்து செய்ய தொடங்கியுள்ளார். இப்படித்தான் இவர் வைல்ட் லைஃப் போட்டோகிராபி(wildlife photography) பயணம் தொடங்கியது.

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் உள்ள சவால்கள்:

திருமணம் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபராக இருந்தால் புகைப்படம் எடுப்பவர்களை எங்கு பார்க்க வேண்டும், என்ன ஆக்ஷன் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் கூறலாம்‌. ஆனால் வனத்தில் இருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளிடம் அப்படி எதுவும் சொல்ல முடியாது. அவை எப்பொழுது அசையும் என்பதை எதிர்பார்த்து அதற்காக காத்திருக்க வேண்டும். அதேபோல் வனத்தில் புகைப்படங்கள் எடுப்பதால் வெளிச்சத்திலும் எந்த கட்டுப்பாடும் இருக்காது. மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் அதற்கு ஏற்றது போல புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.

rathika ramasamy bird photographs

அதே மாதிரி வனத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பதால் நிறைய பேர் ஒன்றாக செல்ல முடியாது. இரண்டு, மூன்று பேர் சொல்லலாம். பல முறை ராதிகா தனியாகவே சென்றுள்ளார். கேமராவின் எடை ஆறு கிலோ முதல் பத்து கிலோ வரை இருக்கும். அதை தனியாக தூக்கிக்கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அது கடினமாக இருந்ததாகவும் பிறகு அது பழகி விட்டதாகவும் ராதிகா ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். காட்டில் இருப்பதால் சாப்பாடு, தண்ணீர் என்ன அடிப்படை வசதிகள் ஒழுங்காக கிடைக்காது. எனவே, அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு முதலில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு காலத்திற்கேற்ப மிருகங்களும், பறவைகளும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ளும். எனவே, அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டால், பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே அழகான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதுவும் பறவைகளை புகைப்படம் எடுக்கும் பொழுது நிறைய தூரம் நடக்க வேண்டியதாக இருக்கும். காட்டிற்குள் இருப்பதால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

rathika ramasamy animal photograph

காட்டிற்குள் பயணம் செல்வதால் அதற்கு பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தயாராக வேண்டும். முக்கியமாக காட்டிற்குள் செல்ல நிறைய விதி முறைகள் உள்ளது, அதை ஒழுங்காக பின்பற்றி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ராதிகா ராமசாமி கூறும் ஆலோசனை:

முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். என்னிடம் கேமரா இருக்கிறது அதனால் நான் விலங்குகளை புகைப்படம் எடுக்க போகிறேன் என்று சொன்னால், அது வேலைக்கு ஆகாது. இந்தத் துறையில் கேமராவின் வேலை வெறும் 30% தான், 70% விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அதைப்பற்றி நாம் படித்து அவை அப்போது என்னென்ன செய்யும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் முதலில் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் ஆர்வம் இருக்க வேண்டும். 

இவை அனைத்தையும் ராதிகா ராமசாமி நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் முதல் பெண் வனவிலங்கு புகைப்படம் கலைஞர் என்று பெயரை பெற்றிருக்கும் ராதிகா இராமசாமி பல விலங்குகளையும் முக்கியமாக பல பறவைகளையும் புகைப்படம் எடுத்துள்ளார். தனது திறமைக்காகவும், உழைப்பிற்காகவும் அவர் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் உடையவர்களுக்கு இதைப் பற்றிய பாடங்களும் அவர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Suggested Reading: Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

Suggested Reading: Black Sheepஇன் இவள் சீரிஸ் உருவான கதை

Suggested Reading: ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

அடுத்த கட்டுரை