உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

Devayani
20 Feb 2023
உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் பல, இந்த சமூகத்தில் பேச தயங்கும் விஷயங்களாக உள்ளது. இந்த விஷயங்களைப் பற்றி டாக்டர் நிவேதிதா மனோகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் கூறிய சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியா உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?

டிஜிட்டல் மீடியா எனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். கொரோனா பலரின் வாழ்க்கையை பாதித்தது. கொரோனாவின் காரணத்தினால் நாங்களும் எங்கள் வேலையை ஆன்லைனில் செய்ய தொடங்கினோம். அப்பொழுதுதான் எனக்கு ஆன்லைன் மூலமாக நிறைய மக்களை சென்றடைய முடியும் என்ற யோசனை வந்தது. நான் இப்பொழுது சிட்னி(Sydney) நகரில் இருந்து பதிவிட்டாலும், அது இந்தியாவில் உள்ள மக்களை சென்றடைகிறது. எனவே, டிஜிட்டல் மீடியா எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம். 

Dr. Niveditha untaboos

குடும்ப வன்முறையை பெண்கள் எப்படி கையாள வேண்டும்?

நம்ம ஊருக்கு வன்முறையை தாங்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. அதாவது நமக்கு எது வன்முறை, எது வன்முறை இல்லை என்பதே தெரியாத அளவிற்கு தான் இருக்கிறோம். இப்போழுது நாம் வன்முறை என்று பேசப்படுவதெல்லாம் முன்பு சாதாரணமான விஷயங்களாக கருதப்பட்டது. நாம் நமது பாட்டிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும், அம்மா எப்படி அனுசரித்து வாழ்ந்தார் என்றும் பார்த்திருக்கிறோம். இப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்ததால், இது வன்முறை இப்படி செய்யக்கூடாது, இதை தாங்கிக் கொள்ளக் கூடாது என்பதை புரிந்து கொள்வதற்கே நமக்கு நிறைய நாட்கள் எடுக்கிறது. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்களை தொடர்ந்து காயப்படுத்துகிறது என்றால் அது அடிதடியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, மனது சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம் அல்லது கையில் காசு கொடுக்காமல் பணரீதியாக அப்யூஸாக கூட இருக்கலாம். எந்த ஒரு விஷயம் உங்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும். எவ்வளவு வருடங்களுக்கு நீங்கள் அதை அனுசரித்துக் கொண்டு வாழப் போகிறீர்கள் என்று எண்ணி, முதலில் அதை கண்டறிய வேண்டும். நாம் இதை கண்டறிந்தால் மட்டுமே அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும், யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை பற்றி யோசிப்போம்.

உங்களின் நம்பிக்கை என்ன?

ஒருவர் ஒரு மாதிரி நிறைய நாட்களுக்கு நடிக்க முடியாது என்பதை நான் நம்புகிறேன். நாம் ஒரு மாதிரியான மனிதராக இருப்போம், ஆனால் இந்த சமூகம் நம்மை ஒரு மாதிரியாக இருக்கச் சொல்லும். நாம் இந்த சமூகம் கூறுவது போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. 

Dr Nive Untaboos

எப்படி இருக்கையில் எனது நம்பிக்கை என்னவென்றால் நாம் நாமாக இருக்க வேண்டும். நீ உன்னை போல் இல்லாமல் வேறு மாதிரி நடித்துக் கொண்டிருந்தால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அதனால் முதலில் இருந்தே உங்களுக்கு பிடிக்காததை செய்யாதீர்கள். உங்களுக்கு சமைக்க பிடிக்கவில்லை என்றால் சமைக்க பிடிக்கவில்லை, அதுதான் நீங்கள். அப்படி இருப்பது மன அழுத்தத்தையும் குறைக்கும். உங்களை நீங்கள் இருப்பது போலவே யாராவது ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.

பெண்களுக்கு பண ரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியம்?

பணரீதியான சுதந்திரம் பெண்களுக்கு மூச்சு விடுவது போல முக்கியமானது. பணரீதியாக சுதந்திரமாக இருந்தால் நீங்கள் யோசிக்கும் விதமும், முடிவெடுக்கும் விதமும் நல்ல முறையில் மாறிவிடும். உங்களைப் பற்றி சொல்லுவதில் எது சரி, சரி இல்லை என்று உணர உங்களிடம் பணம் இருந்தால் போதும். "நம்ம ஊரில் கில்டியா யோசிக்க வச்சிருவாங்க. பணம் வந்துவிட்டதுனால அவளுக்கு திமிர் வந்துருச்சுன்னு. அது பணம் வந்த உடனே வந்த திமிரு அல்ல, அது அந்த பணரீதியான சுதந்திரம் தரக்கூடிய தெளிவான யோசனை".

நேற்று வரை உங்களுக்கு ஒரு விஷயம் தப்பு என்று தோன்றினாலும், குனிய குனிய நீங்கள் கொட்டு வாங்கி கொண்டு இருந்தாலும், நீங்கள் பணம் சம்பாதிக்க தொடங்கும் போது நீங்கள் யோசிக்க தொடங்குவீர்கள். நேற்று வரை வாங்கிக் கொண்டிருந்தது இன்று வாங்கும் பொழுது சிறிது கூடுதலாக வலிக்கும். கையில் காசு இருக்கும் பொழுது இந்த கொட்டு நமக்கு தேவையா? இதை நாம் இப்பொழுது வாங்க வேண்டுமா? என்று தோணும். இது தவறல்ல ஏன் கொட்டு வாங்கி கொண்டிருப்பது தான் சரியா? இல்லை. அதனால் பணரீதியான சுதந்திரம் என்பது நாம் மூச்சு விடுவதைப் போல முக்கியமானது.

இது மட்டும் இன்றி மாதவிடாய், உடலுறவு, HIV, மார்பக புற்றுநோய் போன்ற பல விஷயங்களைப் பற்றி அவர் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click here: Breaking Myths with Dr. Niveditha | Doctor in Sexual and Reproductive | Sex Educator

அடுத்த கட்டுரை