/stp-tamil/media/media_files/nGtNVo4vrM8xEJuSNlRI.png)
பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று வருத்தப்படுகிறோமே தவிர நம்மை நாமே மதிக்க தவறுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுவயதில் இருந்து நாம் எதிர்கொள்ளும் கேலிகள், மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வது இதுபோன்ற செயல்களால் நம் மதிப்பை நாம் குறைத்துக் எடை போடுகிறோம். நீங்கள் உங்களை சுயமதிப்புடன் நடத்த பழகிக் கொள்ள வேண்டும் எனில் இந்த ஐந்து பழக்கத்தையும் பின்பற்றுங்கள்.
1. எல்லோரையும் மகிழ்விக்க நினைக்காதீர்கள்:
சுயமரியாதை அல்லது தன் மதிப்பு குறைவாக உள்ளவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பர். அதனாலேயே மற்றவர்கள் அவர்களிடம் என்ன கேட்டாலும் அதை செய்ய விருப்பமில்லை என்றாலும் சரி என்று கூறுவர். இது வேலையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி. இப்படி அனைத்திற்கும் சரி என்று கூறி அதை செய்வது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம்.
உங்களால் முடிந்தவரை உதவியையும், ஆதரவையும் தரலாம். ஆனால், மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழலில் அல்லது உங்களுக்கு அது பாரமாக இருக்கும் எனில் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தில் அதை நீங்கள் செய்ய சம்மதிப்பது உங்கள் சுயமதிப்பை பாதிக்கும்.
2. மற்றவர்களை உருவ கேலி செய்யாதீர்கள்:
நீங்கள் மற்றவர்களின் உருவத்தை வைத்து கேலி செய்வது அல்லது சாதாரணமாக அவர்களை பார்த்தவுடன் உருவத்தை பற்றி அவர்கள் மனம் நோகுமாறு பேசுவது எந்த விதத்திலும் உங்களுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்க போவதில்லை. எனவே, உருவத்தைப் பற்றி பேசாமல் மற்றவர்களின் நல்ல குணத்தை பற்றியும், அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைப் பற்றியும் பேசி பழகுங்கள். இப்படி செய்வது மூலம் நீங்கள் உங்களையும் மதிப்புடன் கவனித்துக் கொள்வீர்கள்.
3. சுயவிமர்சனத்தை நிறுத்துங்கள்:
நான் அன்பாக பேசுவதை விட நம்மை நாமே விமர்சித்துக் கொள்வது தான் அதிகம். அது உருவம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, திறன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி. சில சமயம் "ஏன் இப்படி இருக்கிறேன்", "என் மூக்கு ஏன் இப்படி இருக்கு", "என் நெத்தி ஏன் இவ்ளோ பெருசா இருக்கு", "ஏன் நம்ம கலர் கம்மியா இருக்கோம்" இது போன்ற கேள்விகள் மூலம் நீங்கள் உங்களை விமர்சித்துக் கொள்ளலாம். இந்த எண்ணங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். இப்படி எல்லாம் நீங்கள் நினைக்கும் பொழுது உங்கள் மதிப்பை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எனவே, இந்த மாதிரியான சுய எதிர்மறை விமர்சனங்களை புறக்கணியுங்கள்.
4. நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்:
நாம் எப்பொழுதும் நடக்கும் நல்லதை நினைத்து மகிழ்வதைவிட நடந்த கெட்டதை நினைத்து தான் நிறைய வருத்தப்படுகிறோம். இதை மாற்றுவதற்கு நாம் நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் சரியாக செல்லாத விஷயத்தை நினைத்து கவலைப்படாமல் நடந்த நல்ல விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுங்கள். தினமும் உறங்க செல்வதற்கு முன்பு அன்று நடந்த மூன்று நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். இப்படி எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை நினைத்து பார்ப்பது மூலம் நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்வீர்கள்.
5. சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள்:
பெரும்பாலான நேரங்களில் நம் சமூக ஊடகங்களில் நமது நண்பர்கள் அல்லது நம்முடன் படித்தவர்கள் அவர்களது வாழ்க்கையை பற்றி பதிவிடும் புகைப்படங்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்கள் சுற்றுலா செல்வது, விலை உயர்ந்த உணவகத்தில் உண்ணுவது, அவர்களின் திருமணம், காதல் வாழ்க்கை இவையெல்லாம் பார்க்கும் போது நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். "நம்ம மட்டும் ஏன் இப்படி இருக்கோம்", "எப்ப நம்ப வாழ்க்கையில இப்படி எல்லாம் நடக்கும்" இது போன்ற கேள்விகளுடன் நமது வாழ்க்கையை அவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். இப்படி நீங்கள் யோசித்தால் சமூக ஊடகங்களில் இருந்து விலகி சிறிது காலம் உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள நன்மைகளையும், இன்பங்களையும் பார்க்க தொடங்குங்கள்.
எந்த ஒரு பழக்கமும் நம்மால் ஒரே நாளில் மாற்றிக் கொள்ள முடியாது. நாம் 21 நாட்களுக்கு ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால், அந்த விஷயம் நம் வாழ்க்கையில் ஒரு வழக்கமாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த ஐந்து பழக்கங்களையும் கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் சுயமதிப்பு அதிகரித்து உங்களை நீங்களே நேசிக்க தொடங்குவீர்கள்.