Advertisment

பணரீதியான சுதந்திரம்(financial independence) தரும் நன்மைகள்

author-image
Devayani
10 Jan 2023
பணரீதியான சுதந்திரம்(financial independence) தரும் நன்மைகள்

பணத்தை வைத்து மனிதனை எடை போடும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்க இன்னும் பல பெண்கள் பணரீதியாக சுதந்திரம்(financial independence) அடையவில்லை. அதற்கான முக்கிய காரணம் ஆணாதிக்கமும், சமூக பாகுபாடுகளும். இதில்  பணரீதியாக சுதந்திரமாக இருந்தால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம்.

Advertisment

1. நீங்கள் மதிக்கப்படுவீர்கள்: 

நீங்கள் பணம் ரீதியாக யாரையும் சார்ந்த இல்லாமல் இருக்கும் பொழுது உங்களை அனைவரும் மதிக்க தொடங்குவர். பல முறைகளில் வீட்டில் இருக்கும் பெண்களை "உனக்கு பணத்தை பத்தி ஒன்னும் தெரியாது அமைதியா இரு, பணத்தோட அருமை உனக்கு எங்க தெரியப்போகுது" இது மாதிரியான கூற்றுகள் மூலம் அவர்களை தாழ்த்துவதுண்டு. 

நீங்கள் சம்பாதித்து அந்த பணத்தை கையாள தெரிந்து கொண்டால் யாரும் உங்களை இது போல் உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல முடியாது. எனவே, ஒரு சமூகத்தில் மரியாதை வேண்டும் எனில் உங்களிடம் உங்களை பார்த்துக் கொள்ளும் அளவிற்காவது பணம் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே வாங்கிக் கொள்ளலாம்:

நாம் பணரீதியாக இன்னொருவரை சார்ந்து இருக்கும்பொழுது அன்றாட தேவைக்கு நமக்கு பயனாக இருக்கும் பொருட்களை வாங்குவதற்கு கூட அவர்களிடம் பணத்தை தருமாறு கெஞ்ச வேண்டி இருக்கும். மற்றும் கொடுத்த பணத்திற்கான கணக்கையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்களை விட செலவுகள் சிறிது அதிகமாக இருக்கும். குறிப்பாக சொல்லப் போனால் மாதவிடாய்க்கு நாப்கின் வாங்குவதற்கு கூட சில சமயம் வீட்டில் இருப்பவர்களிடம் காசு கேட்க வேண்டும். நீங்கள் சுயமாக சம்பாதித்தால் இதுபோன்ற அத்தியாவசிய தேவைக்கு யாரிடமும் அவமானப்படாமல், உங்கள் தேவைகளை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

ammu independent

Advertisment

3. உங்கள் முடிவுகளை நீங்களே எடுக்கலாம்:

பல முறைகளில் பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஆண் தான் முடிவேடுகிறான். ஒரு வேலை நீங்கள் பண ரீதியாக சுதந்திரமாக இருந்தால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அந்த முடிவை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பேசுவதற்கும், உங்கள் விருப்பத்தை கூறுவதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 

4. உங்களுக்கு நீங்களே துணை:

ஒருவேளை திருமண வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் இருந்தால் அல்லது நஞ்சு வாய்ந்த ஒரு உறவில் நீங்கள் மாட்டிக் கொண்டால் நீங்கள் தைரியமாக அதை விட்டு வெளியே வர பண ரீதியாக சுதந்திரம் உங்களுக்கு வேண்டும். நமக்கு தெரிந்தே பல திருமண உறவுகளில் பெண்கள் சொந்தமாக ஊதியம் இல்லாததால் தான் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் வீட்டிலும் "நீ தனியா போய் என்ன பண்ணுவ, உனக்கு  வேலை இல்ல, காசு இல்ல" என்று கூறி அவர்களை அந்த நஞ்சு வாய்ந்த உறவில் இருக்கவே சொல்லுவர். நீங்கள் பண ரீதியாக சுதந்திரமாக இருந்தால் இது போன்ற முனைவுகளை நீங்கள் எடுத்து மீதி இருக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம்.

வாழ்க்கை முழுவதும் ஒருவரால் உங்களுக்கான பண தேவைகளை பூர்த்தி செய்து கொண்டே இருக்க முடியாது வாழ்க்கை பல திருப்பங்களை கொண்டுள்ளது. யார் உங்களுடன் இல்லை என்றாலும் நீங்கள் படித்த படிப்பும் அதிலிருந்து உங்களுக்கு கிடைத்த அறிவும் உங்களுடன் இருக்கும். இதை வைத்து உங்களால் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும்.

Advertisment

Jaya Hey

5. உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளலாம்:

ஒரு மருத்துவரிடம் பெண்களைப் பற்றி பேசும்பொழுது, அவரிடம் ஆலோசனைக்காக வரும் பல பெண்கள் அவர்களிடம் சொந்தமாக பணம் இல்லாததால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வீட்டில் சொல்ல மறுக்கின்றனர். "நாங்க வீட்ல இப்படி இருக்குன்னு சொன்னா இதுக்கு செலவாகும்னு திட்டுவாங்க". இது மாதிரியான பல சிக்கல்களை பணம் இல்லாததால் பெண்கள் அதை மறைத்து விடுகின்றனர். பிரச்சனை பெரிதானவுடன் தான் அவர்கள் மருத்துவரையே அணுகுகின்றனர் என்றும் அவர் கூறியிருப்பார். அதனால், உங்கள் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் அளவிற்காவது உங்களிடம் பணம் இருக்க வேண்டும்.

6. டிராவல் செய்ய முடியும்:

பெண்கள் இப்பொழுது வீட்டில் அடைந்து கிடக்காமல் பல இடங்களுக்கு சென்று, பல மனிதர்களை சந்தித்து, அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டனர். நீங்களும் பணம் ரீதியாக சுதந்திரமாக இருந்தால் மன அமைதியை, மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதற்காக நீங்கள் பல இடங்களுக்கு சென்று வரலாம். நீங்கள் யாரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது பல கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்களை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு, உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யும் அளவிற்கு உங்களிடம் பணம் இருந்தால் அதுவே போதுமானது. எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதாவது இருப்பது சிறந்தது தானே. பலர் பணம் இருந்தால் பெண்களுக்கு திமிரு வந்துவிடும் என்று கூறுவர். அது திமிரை தரவில்லை, ஆணாதிக்கத்தை எதிர்த்து பேசவும், பெண்களின் உரிமையை பெறவும் அதிகாரத்தை அளிக்கிறது.

Advertisment
Advertisment