டிசைனர் சிந்துவின்(Designer Sindhu) வாழ்க்கை பயணம்

தன்னுடைய விருப்பத்தை கண்டறிந்து அதில் திறமையை வளர்த்துக் கொண்டு, தற்போது அதில் சிறந்து விளங்கும் டிசைனர் சிந்துவின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Devayani
15 Mar 2023
டிசைனர் சிந்துவின்(Designer Sindhu) வாழ்க்கை பயணம்

Images of Sindhu

இந்திய குடும்பங்களில் விவாகரத்து என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏன், அதைப் பற்றி வெளிப்படையாக பேசக்கூட பல குடும்பங்களில் சுதந்திரம் இல்லை. அதேபோல் ஒரு உறவில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு அந்த பெண் தான் காரணம் என்ற சிந்தனையும் இந்த சமூகத்தில் இருந்து வருகிறது. இந்த மாதிரியான எண்ணங்களை கொண்டவர்களுக்கு சிந்துவின் வாழ்க்கை இந்த சிந்தனை எல்லாம் தவறு என்று நிருபிக்கிறது. அதேபோல் நமக்கு பிடித்ததை செய்வதற்கு அல்லது புதிதாக ஏதாவது தொடங்க நினைப்பவர்களுக்கு வயது ஒரு வரம்பு இல்லை என்றும் இவரின் வாழ்க்கை கதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சிந்து என்பவர் அவரது 36 வயதில் விவாகரத்து பெற்ற பிறகு தான் தனக்கான ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார். இரண்டு குழந்தைகள், தந்தை என மூவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது. இருப்பினும் 15 வருடங்களாக இல்லத்தரசியாக இருந்த ஒரு பெண்ணிற்கு இந்த சமூகம் நிறைய சவால்களை தந்தது. 

தனக்காக ஒரு வருமானம் வேண்டும் என்று நிறைய வேலைகளை சிந்து செய்ய தொடங்கினார். அப்பொழுது உனக்கு என்ன தெரியும்? யார் வேலை கொடுப்பா? போன்ற கேள்விகள் இவரை சூழ்ந்திருந்தது. அது மட்டும் இன்றி விவாகரத்து பெற்ற ஒரு பெண் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தையும் இவர் எதிர் கொண்டு உள்ளார். 

சிறுவயதில் இருந்து இவருக்கு தைப்பதில் ஆர்வம் இருந்தது. மற்றவர்களுக்கு தைத்து தர வேண்டும் என்பதை விட தனக்கான ஆடைகளை தானே தைத்துக்கொள்ள வேண்டும் போன்ற எண்ணத்தை கொண்டு இருந்தார். வீட்டை சுற்றியுள்ளவர்களுக்கு தைத்துக் கொண்டிருந்த இவர் தனக்கு பிடித்த இந்த விஷயத்தை விரிவடை செய்வதற்காக பேஷன் டிசைனிங் கோர்ஸ் சேர்ந்தார். 

Designed by sindhu

இதில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றார். வாழ்க்கையில் தான் எதற்குமே பயனில்லை என்று நினைத்தவருக்கு இந்த அங்கீகாரம் ஒரு நம்பிக்கையை தந்தது. அதன் பிறகு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் சிறிதாக கடையை திறந்து உள்ளார். ஒரு சிறிய இடத்தை வாங்குவதற்கும் இவருக்கு சவாலாகவே இருந்தது. விவாகரத்து பெற்ற ஒரு பெண் என்பதால் இந்த சமூகத்தின் பார்வை தவறாகவே இருந்தது. இவரின் குணத்தையும், இவரால் வாடகை தர முடியுமா என்ற சந்தேகமும், கேள்வியும் இருந்தது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி ஒரு சிறிய இடத்தில் ஒரு கடையை திறந்தார்.

தனக்கு பிடித்த வேலை செய்து கொண்டே வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் இந்த தொழிலில் அவர் ஈடுபட்டார். திருமண வாழ்க்கையில் இத்தனை நாட்கள் வீணாகிவிட்டது என்ற வருத்தத்தில் இருந்து இவருக்கு இனிமேலாவது சந்தோஷமாகவும், யாரையும் சார்ந்தும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த எண்ணத்தில் அவர் உறுதியாகவும் இருந்தார்.

சிறுவயதில் இருந்து தாழ்வு மனப்பான்மையில் இருந்த ஒரு பெண் பல தடைகளை தாண்டி ஆரம்பித்த இந்த தொழில் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. மைனா நந்தினி maternity photoshootற்காக இவர் தைத்த ஆடை மூலமாக இவர் மற்றவர்களுக்கும் அறிமுகமானார். பிறகு குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களுக்கு இவர் ஆடை வடிவமைத்திருக்கிறார். 

பல நேர்காணலின் மூலம் தனது இந்த பயணத்தை பற்றி கூறி மற்ற பெண்களையும் ஊக்குவித்து வருகிறார் சிந்து. சிறுவயதில் இருந்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்த ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் ஒரு தொழிலை ஆரம்பித்து, அந்த தொழிலில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு தற்போது அதில் சிறந்து விளங்குகின்றார் என்பது பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே இருக்கிறது. இவர் சிறந்த டிசைனர் என்று விருதுகளையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரை