கேரளாவில் இருந்து ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளலாம் என கோயம்புத்தூரை வந்து சேர்ந்தனர். சாதியினால் மறுக்கப்பட்ட காதல் ஜோடிக்கு லாக்கப் கதை ஆசிரியர் சந்திரகுமார் மற்றும் அவர் குழுவினர் உதவி செய்தனர். அன்று வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட பெண்தான் தற்பொழுது ஆட்டோ ஓட்டுவது மட்டுமின்றி பல குழந்தைகளுக்கு படிக்கவும் உதவி செய்து வருகிறார்.
ராஜி அக்கா என்று அழைக்கப்படும் இவர் திருமணம் ஆன பிறகு ஒரு டிராவல்சில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய கணவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தையும் பிறந்தது. இவர்கள் இருந்த இடம் நிறைய தொழிற்சாலைகள் இருக்கும் இடம் என்பதால் அங்கு ஒரு நாள் பிலாஷ்ட் நடந்தது.
அதனால் அவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கு வந்தனர். ராஜி தனது வீட்டை விட்டு வரும்போது பெற்றோர்களிடம் "நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போயிடுவ" போன்ற வசைச்சொற்களை பெற்று வந்துள்ளார். அதற்கு ஏற்றது போலவே அவரின் வாழ்க்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அது அவர் செய்த செயல் சரியா என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பியது.
அப்பொழுது தனக்கு திருமணம் செய்து வைத்தவரிடம் "நான் தான் தெரியாமல் அந்த வயதில் வீட்டை விட்டு வந்து விட்டேன். நீங்களாவது எனக்கு அறிவுரை சொல்லி இருக்கக் கூடாதா" என்று கேட்ட பொழுது, அவர் "நீ வீட்டில் வாழ்ந்தது போல் சொகுசாக வாழ வேண்டும் என்று நினைக்கிறாய், ஆனால் சாதாரண மக்களுடன் சேர்ந்து வாழும் அனுபவத்தை பெற்றுக்கொள்" என்று கூறினார்.
அதன் பிறகு தனது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சாதாரண மக்களோடு சேர்ந்து வாழ தொடங்கினார் ராஜி. சென்னை வந்த பிறகு பல போராட்டங்கள் இருந்தது. ஒரு ஆட்டோவை பெற்று இவர் ஆட்டோவை ஓட்டத் தொடங்கியுள்ளார். புதிய இடம், மொழி என்பதால் ஆரம்பத்தில் இந்த வேலை சிறிது கடினமாகவே இருந்தது.
ஒரு நாள் அவரின் ஆட்டோவில் ஒரு வெளிநாட்டினர் பயணம் செய்தார். அப்பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் கூடவே இருந்து ராஜி பார்த்துக் கொண்டார். அந்த வெளிநாட்டவர் ராஜியை பற்றி ஒரு செய்தி தொகுப்பை எழுதி உள்ளார். அதில் இருந்து தான் பலருக்கு ராஜியை அடையாளம் தெரிகிறது.
அதேபோல் மற்றொரு நாள் இரண்டு குழந்தைகளையும், ஒரு தாயையும் சந்தித்துள்ளார். அவர்களுக்கு குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியவில்லை என்பதால் இவர் உதவி செய்யலாம் என படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டார். இப்படி ஆரம்பித்த இந்த சேவை தற்போது 13 குழந்தைகளுக்கு மேல் வந்திருக்கிறது.
பலர் இவருக்கு உதவ முன் வருகின்றனர். அப்படி பணம் இருப்பவர்களிடம் பணத்தைப் பெற்று இல்லாதவர்களுக்கு சேவை செய்து வருகிறார் ராஜி. தனது ஆட்டோவில் எப்பொழுதும் சிற்றுண்டி பெட்டி, மாத்திரைகள் மற்றும் சுடு தண்ணீர் வைத்திருக்கிறார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை இலவசமாக அழைத்து செல்கிறார். அதேபோல் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் சலுகைகள் தருகிறார்.
ஒருமுறை ரோட்டில் ஒருவர் பைக்கில் இருந்து விழுந்து காலில் காயத்துடன் இருந்தார். அவர் ராஜியிடம் காலில் கட்டிக் கொள்வதற்கு ஒரு துணி இருக்கிறதா என்று கேட்டபோது இவரின் ஆட்டோவில் எதுவும் இல்லை. அதனால் அப்பொழுது இருந்து தண்ணீர், மாத்திரைகள் போன்ற விஷயங்களை இவர் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். பிறருக்கு தேவைப்படும் நேரத்தில் அதனை கொடுத்தும் உதவுகிறார்.
இவரின் இந்த சேவைக்கு வீட்டில் இருப்பவர்கள் தக்க பலமாக இருக்கின்றனர். இவரின் கணவரும், பிள்ளைகளும் வீட்டை பார்த்துக் கொள்வதால், இவரால் இது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்ய முடிகிறது.
அன்று கேரளாவில் இருந்து காதலனுடன் வந்த ஒரு பெண், புதிதான ஒரு இடத்தில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு பலருக்கு உதவி வருகிறார். இந்தியாவில் Uberஇல் அதிக ரேட்டிங் உடைய ஆட்டோ ஓட்டுநர் இவர். ராஜி இருக்கிறதை வைத்து வாழப்பழகி கொண்டது மட்டுமில்லாமல் அதை வைத்து மற்றவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content