பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக முன்று இறுதிப் போட்டியாளர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார் திருநங்கை ஷிவின் கணேசன். இந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் இவர் இரண்டாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஷிவின் இந்த சீசனின் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் அவர் பார்வையாளர்களின் இதயத்தை வென்றுள்ளார்.
"உங்களைப் போன்ற ஒரு அற்புதமான பெண்ணை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த அனுமதித்ததற்கு நன்றி ஷிவின். உங்கள் வெற்றி உங்கள் சமூகத்தின் வெற்றி. நீங்கள் எங்கள் பெருமை" என்று பிக் பாஸ் ஷிவினை வாழ்த்தினார்.
யார் இந்த ஷிவின் கணேசன், எப்படி ஒரு சாமானியராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மக்கள் மனதை வென்றார் இவர்?
ஷிவின் கணேசன் பெருமையின் அடையாளம் என்பதை மறுக்க முடியாது. ஷிவின் தமிழ்நாட்டில் காரைக்குடியில் உள்ள தேவகோட்டை என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். அவருடைய உண்மையான அடையாளத்தை உணர்ந்த பிறகு அவர் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டார். தன் குடும்பத்துக்காகவோ அல்லது சமூகத்திற்காகவோ தன்னை மாற்றிக் கொள்ள ஒரு போதும் அழுத்தம் கொடுக்கவில்லை.
"பாலினம் என்பது அகநிலை. ஒரு நபர் தன்னை எப்படி அடையாளம் காட்டுகிறார் என்பதை பொறுத்தது. நான் யார் என்று எனக்குத் தெரியும், எனது அடையாளத்திற்கு சமூகத்தின் ஒப்புதல் தேவையில்லை" என்று ஷிவின் கூறுகிறார்.
19 வயதில் பாலின மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றி தெரிந்து கொண்டார். சமூகத்தின் தீர்ப்பு, விமர்சனத்திற்கு பயந்து ஷிவினின் தாய் இந்த கட்டத்தை கடக்க உதவும் நம்பிக்கையில் அவரை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில்(Mechanical Engineering) சேர்த்தார். ஷிவின் தனது பாலினத்தின் விளைவாக வீட்டில் அனுபவித்த கொடுமைகளை பற்றி கூறினார். "நான் ஒரு அறையில் அடைக்கப்பட்டேன். என் குடும்பத்தினர் என்னை வெளியே விடவில்லை. கதவின் சிறிய இடைவெளியில் எனக்கு உணவு அளித்தார்கள். எனது சொந்த வீட்டில் கூட யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னை பல சந்தர்ப்பங்களில் அடித்தார்கள்". இருப்பினும் ஷிவின் உறுதியான விருப்பமும், நம்பிக்கையும் கொண்டவராக இருந்ததால், அவர் மனம் தளராமல் இருந்தார்.
அவரின் தாய் அவர் முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை என்பதை உணர்த்த பிறகு ஷிவினை சிங்கப்பூருக்கு அனுப்பி IT துறையில் பணி புரிய வைத்தார். ஷிவின் வெளிநாட்டில் நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்று அவரது தாயார் நம்பினார். இருப்பினும் ஒரு வருடத்திற்கு பிறகு சிவின் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்தார். ஏனென்றால், அவர் பாலினம் மட்டுமே அவரை வீட்டை விட்டு விலகி வைத்தது. வருங்கால சந்ததியினர் அதே பிரச்சினையை எதிர்கொள்வார்கள் என்று அவர் நம்பியதால் அவர் இதற்கு ஒரு மாற்றமாக இருக்க முடிவு செய்தார். சவால்களை எதிர்கொள்ள தயாராக இருந்த அவர் 2018ல் இந்தியாவுக்கு திரும்பி இங்கு உள்ள IT துறையில் வேலை பெற்றார். அவர் இந்தியாவுக்கு திரும்பியது அவரது தாயாரை வருத்தப்படுத்தியதாகவும், அவர்கள் இப்பொழுது பேசிக் கொள்வதில்லை என்றும் அவர் கூறினார். இவரைப் போன்றவர்களை சமூகம் ஏற்றுக் கொல்லாதது, தனது தாயிடம் இருந்து தன்னை எவ்வாறு பிரித்தது என்பதை குறித்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.
ஒரு நபரின் பாலினம் பற்றிய கவலை அவருடைய துணைக்கு மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும், சமூகத்திற்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கூறினார். திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமமாக கிடைக்கும் வரை, அவர்கள் கண்ணியமாக ஒரு வாழ்க்கையை வாழும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார்.
அவருக்கு பிக் பாஸில் பங்கு பெற கிடைத்த வாய்ப்பை ஒரு பெரிய பொறுப்பாக கருதுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது அவருக்கானது மட்டுமல்ல அவரைப் போன்றவர்களுக்காகவும் சேர்த்து அவர் பங்கு கொள்கிறார். ஒருவர் அவர்களை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு யாராலும் அவர்களை நிறுத்த முடியாது என்பதை உலகத்திற்கு காட்ட விரும்புகிறார். அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது என்று நம்புகிறார். இவரைப் பார்த்து இந்த சமூகத்தில் திருநங்கைகளால் படிப்பு, வேலை, பணரீதியான சுதந்திரம் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார். எந்த பாலினமாக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி மற்றும் பணம் சம்பாதிக்க கூடிய திறன் இருந்தால் அவர்களால் சாதாரண வாழ்க்கையை இந்த சமூகத்தில் வாழ முடியும் என்பதை மக்களுக்கு காட்டுவதை ஒரு இலக்காக கொண்டுள்ளார்.
மேலும் அவருக்கு சிறுவயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வமிருந்ததென கூறுகிறார். திரை உலகில் திருநங்கைகளுக்கு பதிலாக ஒரு ஆண் பெண் வேடம் அணிந்து நடிப்பதற்கு பதிலாக திருநங்கைகளே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் சினிமாவில் சாதிக்க நினைக்கும் திருநங்கைகளுக்கு அது நிறைய வாய்ப்புகளை தரும் என்றும் கூறுகிறார். அவர் தன்னை ஒரு நடிகையாகவும், மாடலாகவும் பிரதிபலிக்கிறார். மேலும், அவர் பிக் பாஸில் பங்கேற்பது மூலம் இந்த சமூகத்தில் உள்ள பாகுபாட்டை உடைக்க நினைக்கிறார்.
ஷிவின் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர், நடிகை மற்றும் மாடல் என்பதை தவிர பள்ளிகளில் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியராகவும், அவர்களுக்கு தொழில் வழிகாட்டியாகவும் பணிபுரிகின்றார். இவர் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022இல் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் தமிழின் முதல் திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து ஷிவினுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக உள்ளார். சிவின் LGBTQIA சமூகத்திற்காக குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Suggested Reading: தீபா அக்கா (Deepa CWC) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?
Suggested Reading: Dhee பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?