செலவில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஐந்து எளிய வழிகள்

Devayani
26 Dec 2022
செலவில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஐந்து எளிய வழிகள்

புத்தாண்டு என்றாலே எல்லோரும் சிறப்பான ஒன்றாக கருதுகின்றனர். புதிய வருடத்திற்கு செல்லும் முன்னர் கடந்த ஆண்டின் கஷ்டங்களை மறந்து, புதிய நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சியுடன் புத்தாண்டை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஜனவரி ஒன்றை விட டிசம்பர் 31 இரவிற்காக தான் நாம் அதிகம் காத்திருக்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை பார்க்கும்போது, நமக்கும் ஒரு நல்ல உணர்ச்சியை தருகிறது. அனைவரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட நினைப்போம், ஏனென்றால் அந்த நாள் நம் துன்பங்களை எடுத்துக்கொண்டு புதிய ஆரம்பத்தை தரவுள்ளது. 

மக்கள் உறவினர், அக்கம் பக்கத்தினரிடம் வேறுபாடுகளை மறந்து புதிய நாள், புதிய வருடத்தை, புதிய உறவுகளை வரவேற்கிறார்கள். சிலர் புத்தாண்டை நிறைய செலவு செய்து பெரிதாக கொண்டாட நினைப்பார்கள். சிலருக்கு அது தேவையில்லாத பண செலவாக தோன்றும். சிலர் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட முடியவில்லை என்றும் நினைப்பதுண்டு. ஆனால், நாம் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம் என்பதை விட நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியமானது.

புத்தாண்டு புதிய ஆரம்பத்தின் கொண்டாட்டம். அதை கொண்டாடுவதற்கான காரணம் புதிய இலக்கு மற்றும் நம் வாழ்க்கையில் மற்றொரு ஆண்டு இணைந்த மகிழ்ச்சியை வரவேற்பதற்கான நோக்கமாகும்.

உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய ஐந்து எளிய வழி புத்தாண்டு கொண்டாடும் முறைகள்:

1. DJ மற்றும் நடனம்:
உங்கள் வீட்டு மாடியில் அல்லது தோட்டத்தில் அல்லது வீட்டிற்குள்ளேயே ஒரு சிறிய நடன பார்ட்டியை நடத்தலாம். அதற்கு பெரிய அளவில் செலவுகள் ஆகப்போவதில்லை. ஆனால், அந்த அனுபவம் உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கக்கூடும். உங்களுக்கு பிடித்த பாடல்களை முன்பே தேர்ந்தெடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் என உங்களுக்கு பிடித்தவர்களை அழைத்து, நீங்கள் உங்கள் வீட்டிலேயே பெரிய செலவுகள் எதுவும் இல்லாமல் இந்த டான்ஸ் பார்ட்டியை(dance party) நடத்தலாம்.

family movie

2. வீட்டு பார்ட்டி:
வீட்டில் ஒரு அறைக்குள் இருந்தே ஒரு சாதாரண பைஜாமா பார்ட்டியை(pyjama party) நடத்தலாம். குடும்பத்தினர், நண்பர்கள், சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்து அல்லது நிகழ்ச்சியை தேர்வு செய்து ஒன்றாக அதை பார்க்கலாம். படத்தை பார்க்கும் போது பாப்கான் அல்லது வேறு சில சிற்றுண்டுகளை வாங்கி அல்லது பிடித்த உணவை ஆர்டர் செய்து குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் இணைந்து படத்தை பார்க்கலாம். அது மட்டும் இன்றி உங்கள் பள்ளி பருவத்தில், கல்லூரியில் நடந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடலாம். இது புத்தாண்டுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

3. ஒரு நாள் சுற்றுலா:
ஒரு நாள் சுற்றுலா என்பதால் நிறைய பணம் செலவாகாது. பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு பார்க், மலை, நீர்வீழ்ச்சி அல்லது ஏதோ ஒரு இடத்திற்கு குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்று வரலாம். இந்த மாதிரி இயற்கையுடன் சிறிது நேரம் செலவிடுவதால் நீங்கள் புத்துணர்ச்சியாகவும், உங்கள் மனம் இலகுவாகவும் இருக்கும். உணவுகளை நீங்கள் வெளியில் வாங்கிக் கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்தே சமைத்து எடுத்துச் செல்லலாம். அப்படி நீங்கள் பொது இடத்திற்கு செல்லும் பொழுது சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்கும் படி உங்கள் புத்தாண்டை கொண்டாடுங்கள்.

fun game

4. விளையாட்டுப் போட்டிகள்:
இப்பொழுது விளையாடுவதற்கு பெரிய மைதானம் அல்லது ஒரு பெரிய இடமோ தேவைப்படுவதில்லை. வீட்டிலேயே குடும்பத்தினர்களுடன் விளையாடும் வழிகள் நிறைய வந்துவிட்டது மற்றும் சமூக வலைதளங்களில் இது போன்ற குடும்பத்துடன் விளையாடும் விளையாட்டுகள் வைரல் ஆகி வருகிறது. வெறும் பேப்பர் கப்(paper cup) மற்றும் சிறிய பந்துகளை வைத்து நிறைய விளையாட்டுகளை விளையாட முடியும். பேப்பர் கப் மற்றும் சிறிய பந்துகள் வாங்குவதற்கு பெரிய அளவில் செலவாகாது. குடும்பத்தினர்களுடன் சேர்ந்து அல்லது நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் இதை விளையாடலாம். இது நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் இருக்கும்.

5. தூக்கம் மற்றும் பிற விஷயங்கள்:
நாம் வாழும் இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் நிறைய உள்ளது மற்றும் விடுமுறைகள் குறைவாக உள்ளது. உங்களுக்கு எதுவும் செய்ய பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உறங்க வேண்டும் என்று நினைத்தால் அதையும் நீங்கள் செய்யலாம். ஒருவேளை தூங்கினால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கலாம். அதில் எந்த தவறும் கிடையாது. 

இப்படித்தான் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. உங்களுக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நீங்கள் செய்து புத்தாண்டை கொண்டாடலாம். உங்களுக்கு எதுவும் செய்ய விருப்பம் இல்லை எனில் நீங்கள் எதுவும் செய்யாமல் கூட ஓய்வெடுக்கலாம். ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர்கள் என்பதை உணர்ந்து உங்களுக்கு எது நிம்மதியை தருமோ, மகிழ்ச்சியை தருமோ அதையே செய்து புத்தாண்டை தொடங்குங்கள்.


Suggested Reading: உங்கள் புத்தாண்டு ரெசல்யூஷன் நிலைப்பதில்லையா? இதை படியுங்கள் 

Suggested Reading: இந்த ஐந்து விஷயங்களை புத்தாண்டு ரெசொல்யூஷனாக எடுங்கள் 

Suggested Reading: புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்⁠⁠⁠⁠⁠⁠⁠

Read The Next Article