மாதவிடாய் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள்

Devayani
25 Nov 2022
மாதவிடாய் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள்

மாதவிடாய் எல்லா பெண்களுக்கும் நடக்கக்கூடிய ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த நிகழ்வை பல காரணங்களை கூறி அசுத்தம் என அனைவரையும் நம்ப வைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வை ஏன் அவமானமாக பார்க்க கூடாது என்பதை தெரிந்து கொள்ள கீழுள்ள ஆறு குறிப்புகளையும் படியுங்கள். 

1. மாதவிடாய் அவமானம் இல்லை: 
மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்று கற்பிக்கப்படும் சமூகத்தில் பெண்கள் வளர்கின்றனர். இத பண்ணாத, அத பண்ணாத, இதை தொடாத, அங்க போகாத என்ற பட்டியல் மாதவிடாய் காலத்தில் அதிகமாகிறது. இது போன்ற விஷயங்கள் பெண்கள் மனதில் ஆழமாக பதிந்து மாதவிடாய் என்றால் ஒரு அவமானம் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால், அவர்கள் அவமானமாக கருதுவதற்கும், இந்த மாதிரியான தடைகள் போடுவதற்கும் மாதவிடாய் அசுத்தமானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2. மாதவிடாய் அசுத்தம் என பரப்பும் சங்கிலியை உடைக்க வேண்டும்:
மாதவிடாயை அவமானமாக நினைக்கும் ஒரு குடும்பத்தில் பெண்கள் வளரும் பொழுது அவர்கள் அடுத்த தலைமுறைக்கும் அதையே எடுத்துச் செல்கின்றனர். சில பெண்கள் அவர்கள் முன்னோர் சொல்லி தந்ததை அவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தராத பொழுது, மாதவிடாயின் போது அவர்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்தாத போது இந்த சமூகம் அவர்களை மேலும் வஞ்சிக்கிறது. காலம் காலமாக இப்படித்தான் மாதவிடாய் அசுத்தம் என்ற விஷயம் தொடர்ந்து வருகிறது. முதலில் நாம் இந்த சங்கிலியை உடைப்பதை முன்னுரிமையாக கொள்ள வேண்டும்.

3. மாதவிடாய் இயற்கை நிகழ்வு:
உங்கள் உயிரியல் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் இந்த தலைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட முழு பகுதியை நீங்கள் காண முடியும். பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் இந்த தலைப்பை தவிர்ப்பதால் இளம் தலைமுறைகளுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு கிடைப்பதில்லை. ஆனால், அதனை படிக்கும் பொழுது தான் நமக்கு மாதவிடாய் பற்றி தெரியும். உலகில் ஒரு புதிய உயிரை தருவதற்காக பெண்களின் உடலில் நடக்கும் ஒரு இயல்பான விஷயம் என புரிந்து கொள்ள முடியும்.

4. ஆண்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்:
ஆண்களிடமிருந்து ஏன் மாதவிடாயை மறைக்கக்கூடாது எனில், எல்லா வீடுகளிலும் அப்பா, அண்ணன், தம்பி, கணவன் என்ற உறவில் ஏதேனும் ஒரு ஆண் இருப்பார்கள். மறைக்கும் அளவிற்கு அது ஒன்றும் மோசமான விஷயம் கிடையாது. ஆனால், இதைப் பற்றி தெரிந்து கொள்வது மூலம் பெண்களை மாதவிடாய் காலத்தில் அவர்கள் அக்கறையாக பார்த்துக் கொள்ள உதவும். அதாவது அவர்கள் முன் இந்த தலைப்பை பற்றி பேசுவதை தவிர்க்காமலும், நாப்கின்களை மறைக்காமலும் சுதந்திரமாக இருக்க முடியும். 

5. மாதவிடாயும் அதை சுற்றியுள்ள மூடநம்பிக்கையும்:
மாதவிடாயை சுற்றி இந்த சமூகத்தில் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்து வருகிறது. இதில் பல மூடநம்பிக்கைகளுக்கு அர்த்தமே தெரியாமல் அடுத்த தலைமுறைக்கும் அதை பரப்பி வருகின்றனர். சாதாரணமாகவே சமூகத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது. மாதவிடாய் காலத்தில் அந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகிறது. அந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறு சில விதிமுறைகளும், அறிவியல் சார்ந்த விளக்கங்களும் தரப்படுகிறது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலானவை வெறும் மூடநம்பிக்கை மட்டுமே.

6. நாப்கின்களை மறைக்க தேவையில்லை:
நாம் பெரும்பாலும் கடைகளில் நாப்கின் வாங்கும் பொழுது அதனை ஒரு பையில் போட்டோ, செய்தி தாளில் மறைத்தோ அதை எடுத்து செல்வோம். இதேபோல் பள்ளிகளில், வேலை செய்யும் இடங்களில் ஆண்களின் கண்களில் நாப்கின் படாமல் அதனை மறைத்து கழிப்பறைகளுக்கு எடுத்துச் செல்வோம். ஏன் நாம் மற்ற பெண்களிடம் அவசரத்திற்கு நப்கின் கேட்பதை கூட யார் காதிலும் விழக்கூடாது என்ற எண்ணத்தில் மறைந்து மறைந்து தான் கேட்போம். முதலில் நாம் எப்படி நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும். முன்குறியது போல ஆண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் இது மாதிரியான நிகழ்வுகள் குறையும்.

Read The Next Article