ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று இந்த சமூகத்தில் நிறைய கருத்துக்களும், விதிமுறைகளும் இருக்கிறது. அதுவும் இது போன்ற விஷயங்கள் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டால் அது இன்னமும் அதிகமாகிறது. அதேபோல், குழந்தை பெற்ற பிறகு அவள் நிறைய தேவை இல்லாத கருத்துக்களை இந்த சமூகத்திடமிருந்து எதிர்கொள்கிறாள். பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களிடம் சொல்லக்கூடாத அல்லது கேட்கக்கூடாத மூன்று விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. மற்ற பெண்களுடன் ஒப்பிடாதீர்கள்:
"அவளுக்கும் தான் குழந்தை பிறந்தது அவ நல்லா ஆக்டிவா இருக்கா, நீ மட்டும் ஏன் இப்படி இருக்க" இதுபோன்று மற்ற குழந்தை பெற்ற பெண்களுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள். ஒவ்வொருவரின் கர்ப்பகால அனுபவங்கள் மற்றும் குழந்தை பிறப்பு அனுபவங்கள் வேறுபடுகிறது. சிலருக்கு அது எளிதாக இருக்கும் சிலருக்கு அது கஷ்டமாக இருக்கும். இப்படி இருக்கும் பொழுது நீங்கள் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களின் எல்லா அனுபவங்களும் வேறுபடும்.
2. அந்தக் காலத்துடன் ஒப்பிடாதீர்கள்:
பெரும்பாலும் அந்த காலத்தில் பெண்கள் அவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கே பெண்கள் ஓவர் சீன் போடுகிறார்கள் என்று கூறுகின்றனர். இந்த கருத்துக்களை நம்மில் பலர் கேட்டிருப்போம். ஆனால், அப்பொழுது வாழ்ந்த வாழ்க்கை முறையும் தற்பொழுது நாம் வாழும் வாழ்க்கை முறையும் முற்றிலும் வேறானது. சுற்று சூழலில் இருந்து நாம் சாப்பிடும் உணவு வரை முற்றிலும் மாறி போயிருக்கிறது. இன்று கலப்படம் இல்லாத பொருட்களை பார்ப்பதே அரியதாகிவிட்டது. அப்பொழுதும் பெண்கள் இது போன்று கஷ்டப்பட்டனர். ஆனால் அந்த ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். மேலும் இதை பெண்களின் கடமை என கருதினர்.
3. சீக்கிரமா வெயிட்டை குறை:
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நிறைய மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். Postpartum என்று கூறப்படும் அந்த நிலையில் பெரும்பாலான பெண்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த கட்டத்தை கடந்து வருவது பெண்களுக்கு கடினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இப்படி இருக்க உடல் ரீதியாக அவர்களை குறை சொல்லும் பொழுதும், உடல் ரீதியான கருத்துக்களை கூறும் பொழுதும் அது மேலும் அவர்களை பாதிக்கக்கூடும். குழந்தை பெறுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் முழுமையாக குணமடைவதற்கு ஒரு சில மாதங்கள் ஆகும். அதன் பிறகு தான் அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். அதற்குள் அவர்களை இது போன்ற கருத்துக்களால் கஷ்டப்படுத்தாதீர்கள்.
குழந்தை பெற்ற பிறகு பெண்கள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதால் நாம் அவர்களை இந்த நிலையில் ஆதரிப்பது மிகவும் அவசியமாகிறது. ஏற்கனவே அவர்கள் நிறைய வலிகளை தாங்கிக் கொண்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இதுபோன்ற கருத்துக்களை கூறி அவர்களை கஷ்டப்படுவதை நிறுத்துங்கள்.
சில சமயம் உங்களால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களை கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும்.
Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்
Suggested Reading: காதல் உறவில் உள்ள ஐந்து அபாயங்கள்
Suggested Reading: ஏன் உங்கள் காதல் உறவை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது?
Suggested Reading: Toxic relationshipஇல் இருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்