/stp-tamil/media/media_files/S9NDsIF9LMGChdV5PGcg.png)
இந்த சமூகம், பெண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது என எதிர்பார்க்கிறது. அப்படி சமூக விதிகளை மீறி அவர்கள் ஒரு விஷயத்தை செய்யும் பொழுது அவர்களை குணமற்றவர்களாக நினைக்கிறது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விஷயங்களும் ஒரு பெண்ணை எந்த விதத்திலும் குணமற்றவளாக மாற்றாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
1. மாதவிடாய் பற்றி பேசுவது:
மாதவிடாய் பற்றி மறைத்து மறைத்து பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் போய்விட்டது. ஒரு இயற்கையான செயலை அசுத்தம் என மாற்றி பல ஆண்டுகளாக அதை பெண்களையே நம்ப வைத்து வருகின்றனர். இந்த மாறப்பட்ட காலகட்டத்தில் உடல்நிலை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருவது போலவே மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. ஏன் சொல்லப்போனால் இந்த பிரச்சனைகள் கடந்த காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கும் இருந்திருக்கலாம், மாதவிடாய் பற்றி பேசுவது அவமானம் என்ற எண்ணத்தில் அதையும் மறைத்தும் இருக்கலாம். எனவே, இந்த நிலைமை மாறவேண்டும் எனில் தற்போது பெண்கள் மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுவது அவசியமாகிறது. அதேபோல் மாதவிடாயை மறைக்க எந்த ஒரு அவசியமும் இல்லை, மறைக்கும் அளவிற்கு தீங்கான விஷயமும் அது அல்ல.
2. வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது:
பெண்கள் என்ன செய்தாலும், கஷ்டப்பட்டு படித்து, வேலை வாங்கி அதை செய்து கொண்டு இருந்தாலும், அவள் கனவை நிறைவேற்ற அவள் உழைத்தாலும், அவளுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க நினைத்தாலும் இது அனைத்திற்கும் முன் அவள் வீட்டு பொறுப்பை முக்கியமாக கருத வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு பொறுப்பில் பங்கு கொள்வது அவசியம் தான், ஆனால் கனவு, வேலையை விட்டுவிட்டு ஒரு தனிநபராக உதவிகள் இல்லாமல் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்கிறது இந்த சமூகம். இப்படி மனசாட்சி இல்லாமல் சமூகம் நினைக்கும் பொழுது, பெண்களும் மனசாட்சி இல்லாமல் வேலைக்கு முக்கியத்துவம் தருவது தவறு இல்லை.
3. விவாகரத்து:
ஒரு பெண் விவாகரத்து பற்றி பேசினாலே வீட்டில் உள்ளவர்கள் அந்த பேச்சுகளை தவிர்ப்பதுண்டு. இந்த சமூகத்தை பொறுத்தவரை ஒரு பெண்ணின் மதிப்பு அவளின் திருமண வாழ்க்கையில் தான் உள்ளது. அதேபோல் கணவன் இல்லாத பெண்கள், கணவனை பிரிந்த பெண்களை இந்த சமூகம் தாழ்த்தப்பட்டவர்களாக நினைக்கிறது. ஒரு உறவில் எந்த பிரச்சனை வந்தாலும் பெண்கள் தான் அனுசரித்து செல்லவில்லை என்று பெண்களை குறை கூறும் இந்த சமூகம், வழக்கம் போல ஆண்களின் கொடுமையில் இருந்து வெளிவர விவாகரத்து செய்யும் பெண்களையும் குறை சொல்ல தான் போகிறது. பலர் குழந்தைக்காக நச்சு வாய்ந்த உறவில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அந்த உறவில் பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் மன அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று புரிந்து கொள்வதில்லை. ஒரு பெண்ணின் நல்வாழ்விற்காக இதை கூறுகிறோம் என்று சொல்லும் சமூகம், உண்மையில் நல்லது செய்ய வேண்டும் எனில் விவாகரத்து செய்த பெண்களை மதிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஒரு முடிவை எடுப்பதற்கு அவள் பல கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்து இருப்பாள்.
4. அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பது:
பெண்கள் யாரையும் எதிர்த்து பேசக்கூடாது என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சூழலில் வளர்ந்தவர்கள், ஒரு பெண் அவள் உரிமைக்காக குரல் கொடுப்பதை வித்தியாசமாக பார்க்கின்றனர். அதேபோல் பெண்கள் என்றால் அவர்களிடம் இருப்பதை வைத்து தான் வாழ வேண்டும் என்றும், அவர்கள் தேவைக்காக எதையாவது கேட்க போனால் அவர்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள் என்ற பட்டத்தை அவர்களுக்கு வழங்குகிறது. பெண்கள் அமைதியாக இருக்கும் வரை அவர்களுக்கு எதிரான அநியாயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது வீட்டிலும் சரி, வெளி உலகிலும் சரி. எனவே, அவர்களின் உரிமைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்காகவும் அவர்கள் குரல் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.