இளம் வயதில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஐந்து விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதை தெரிந்து கொள்வது மூலம் பலர் செய்யும் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க முடியும். பெரும்பாலும் திரைப்படங்களில் இருபது வயதில் காதலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், வாழ்க்கையில் காதலை தாண்டி நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் நிறைய உள்ளது.
1. உங்கள் விருப்பங்களை கண்டுபிடியுங்கள்:
இருபதுகளில் தான் நாம் நிறைய முக்கியமான முடிவுகள் எடுக்க நேரிடும். நாம் என்ன படிக்க போகிறோம், எந்த கல்லூரியில் படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் இந்த மாதிரியான நம் வாழ்க்கைக்கு தேவையான முக்கிய முடிவுகளை நாம் இருபதுகளில் தான் எடுப்போம். நாம் எடுக்கும் எல்லாம் முயற்சிகளும் நமக்கு சாதகமாக முடியும் என உறுதி அளிக்க முடியாது. ஆனால், அதற்காக நாம் முயற்சி செய்வதையும் நிறுத்தி விடக்கூடாது. நமக்கு என்ன பிடிக்கும், நமது விருப்பம் எதில் உள்ளது, எதை செய்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நாம் அதை கண்டுபிடித்து விட்டால் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் அதை நோக்கி நம் முழு கவனத்தையும் செலுத்தலாம். இப்படி நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் வாழ்க்கையை மேம்படுத்தும்.
2. எப்பொழுதும் உங்கள் கம்போர்ட் சோனில் (comfort zone) இருக்காதீர்கள்:
நாம் பெரும்பாலும் நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என நினைக்கிறோமே தவிர, அதற்காக உழைக்க தவறுகிறோம். நம் வாழ்வில் ஏதாவது ஒரு அதிசயம் நிகழாதா? என்று நினைக்கிறோம். நமக்கு ஒரு விஷயம் வேண்டுமெனில் அதற்கான உழைப்பை நாம் தான் போட வேண்டும். இருபதுகளில் தான் நம்மிடம் நிறைய நேரமும், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். எந்த முயற்சியும் எடுக்காமல் எப்பொழுதும் கம்போர்ட் சேனில் இருக்க நினைத்தால் பிற்காலத்திற்கு வருத்தப்படுவீர்கள்.
எனவே, பல முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். தோல்விகளை கண்டு அஞ்சாமல் அந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டதை வைத்து மீண்டும் முயற்சிக்கவும். எந்த ஒரு நபரும் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் முன்னேற முடியாது. ஒருவர் எதையோ ஒன்றை சாதித்து இருக்கிறார் என்றால் அவர்கள் அவர்களின் கம்போடசோனிலிருந்து வெளிவந்து பல தோல்விகளை கண்டு, பல முயற்சிகளுக்கு பின்பு அந்த நிலையை அடைந்திருப்பர். எனவே, உங்களுக்கு ஏதாவது ஒன்று வேண்டுமெனில் அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.
3. பணத்தை கையாள்வது:
நம்மில் அனைவருக்கும் இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த பணத்தை வைத்து நாம் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவும் இருக்கும். ஆனால், சம்பாதிக்க ஆரம்பித்த உடன் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் நாம் அனாவசியமாக நிறைய பணத்தை செலவிடுகிறோம். சிறுவயதில் இருந்து பணத்தை சேமித்தல், முதலீடு செய்தல் பற்றி நம்மிடம் பெரும்பாலும் யாரும் கூறாததால் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போகிறது. எனவே, நீங்கள் உங்கள் இருபதுகளில் பணத்தை எதில் செலவிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முதலீடு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
4. அனைவரும் மாறக்கூடும்:
நாம் எப்போதும் ஒருவர் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் காலப்போக்கில் ஒவ்வொருவரும் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ப மாறுவதுண்டு. அதனால் ஒருவர் நம்முடன் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என எண்ணவது நமக்கு தான் கவலையை தரும். உதாரணத்திற்கு கல்லூரியில் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர், உங்களுடன் தினமும் பல மணி நேரங்களை செலவழித்து இருக்கலாம், நீங்கள் அவர்களுடன் நிறைய பேசியிருக்கலாம். ஆனால், படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு நீங்கள் இருவரும் முன்பு போல் பேசிக்கொள்ள முடியாமல் போய் இருக்கலாம். இது போன்று உங்களுக்கு சில அனுபவங்கள் இருக்கலாம். எனவே, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரியான மாற்றம் மற்றவர்களுக்கு ஏற்படுவது போல உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து சில மாற்றங்கள் ஏற்படலாம். இது ஒரு இயல்பான விஷயம். எனவே, இதை பற்றி நீங்கள் நிறைய நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.
5. மனம் மற்றும் உடல் ஆரோக்கியம்:
நாம் இருபதுகளில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள தவறுகிறோம். வாழ்க்கையில் நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. அதேபோல் நம் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளும் கடமையும் நமக்கு இருக்கிறது. இருபதுகளில் உண்ணும் உணவும், செய்யும் உடல் பயிற்சிகளும் தான் பிற்காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே, நீங்கள் ஜங்க் ஃபுட்யை (junk food) தவிர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். பலர் குடும்பங்களை விட்டு ஹாஸ்டல்களிலும் இருப்பீர்கள். அவர்கள் பெரும்பாலும் உணவை தவிர்ப்பது உண்டு. அப்படி செய்வது பிற்காலத்தில் உங்களுக்கு நிறைய பிரச்சினையை கொண்டு வரும். எனவே, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் உணவுகளை வாங்கி உண்ணுங்கள். நீங்கள் பிற்காலத்தில் நிறைய பணம் சம்பாதித்து, உங்கள் உடம்பில் ஆரோக்கியம் இல்லையெனில் அவை அனைத்தும் வீணாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Suggested Reading: மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள ஐந்து எளிமையான வழிகள்
Suggested Reading: அதிகமாக சிந்திப்பதை (over thinking) நிறுத்த ஐந்து வழிகள்
Suggested Reading: உடனே மருத்துவரை சந்திப்பதற்கான பத்து அறிகுறிகள்
Suggested Reading: மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தோடுசம்பந்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?