52 வயதில் பளு தூக்கும்(weight lifting) போட்டியில் வென்றார் சோமசுந்தரி

தனது 52 வயதில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சோமசுந்தரி மனோகரனின் பயணத்தை பற்றி தெரிந்து கொள்வது மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்ததை எந்த வயதிலும் நீங்கள் செய்யலாம் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

Devayani
17 Mar 2023
52 வயதில் பளு தூக்கும்(weight lifting) போட்டியில் வென்றார் சோமசுந்தரி

Image of Somasundhari Manoharan

சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களும், வயதான பெண்களும் விளையாடி நாம் பெரும்பாலும் பார்த்திருக்க முடியாது. இது அவர்களால் விளையாட முடியாது என்பது அல்ல. இந்த சமூகத்திற்கு பயந்தும், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் அவர்கள் திறமைகளை, விருப்பங்களை பின் தொடராமல் இருப்பதாகும். ஆனால் தற்பொழுது நிறைய பெண்கள் சமூக பாகுபாட்டினை உடைத்து தங்களுக்குப் பிடித்ததை செய்ய தொடங்கி விட்டனர். வயது ஒரு தடை இல்லை என்பதையும் பல பெண்கள் நிரூபித்து வருகின்றனர்.

அப்படித்தான் சோமசுந்தரி மனோகரனும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்ற வரையறை நம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. அதேபோல் உடையை வைத்து சுலபமாக ஒருவரின் மதிப்பை முடிவு செய்கின்றனர். ஆனால் சோமசுந்தரி தினமும் ஜிம்மிற்கு புடவை அணிந்து கொண்டு செல்கிறார். இது ஒருவர் செய்ய விரும்பும் விஷயத்திற்கு ஆடை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை இந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது. 

சோமசுந்தரி மனோகரனின் மருமகளிடம் பேசிய போது அவரின் மாமியாரின் திறமையை பற்றியும், அவர் எப்படி தடைகளை தாண்டி தனக்கு பிடித்ததை செய்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

"எனது மாமியாருக்கு 52 வயதில்தான் பளு தூக்குதல் அறிமுகமானது. எனது கணவர் Madras Barbell என்ற ஒரு ஜிம்மை 2018 திறந்தார். அப்பொழுதுதான் எனது மாமியார் சோமசுந்தரி மனோகரனுக்கு பளு தூக்குதல் அறிமுகமானது. அவருக்கு மிகக் கடுமையான மூட்டு வலி இருந்ததால் அதை உடல் பயிற்சியின் மூலம் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார். வீட்டிலேயே இருந்த ஒரு இல்லத்தரசிக்கு ஜிம்மிற்கு செல்வதே ஒரு புதிதான காரியம். அப்படி இருக்க இவர் ஜிம்மிற்கு சென்று அங்கு பளு தூக்குதல் என்ற ஒன்று அவரை மிகவும் உற்சாகப்படுத்துவதை கண்டறிந்தார். 

அக்டோபர் 2022 பெண்கள் பளு தூக்கும் போட்டியில் பங்குபெற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் மொத்தமாக 210 கிலோ எடைகளை தூக்கி 50 வயது பிரிவில் முதல் இடத்தை வென்றார். இதில் தனது வலுவை காண்பித்தது மட்டுமின்றி பல பெண்களையும் அது ஊக்கவித்தது.

அவர் தினமும் வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் இருப்பது, எங்களுக்கும், இதனை பார்த்து கொண்டு இருக்கும் மக்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கிறது.

நம் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்றொரு பாகுபாடான உடை வைத்து ஒரு மனிதரை எடை போடுவதையும் இவர் உடைத்திருக்கிறார். அவர் புடவை அணிந்து பளு தூக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் அது அவருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது. புடவையில் பளு தூக்குதல் என்பது நம் சமூகத்தில் சாதாரண ஒன்றாக பார்ப்பதில்லை. ஆனால் எனது மாமியார் இந்த தடையை உடைத்து புதவிதமான ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேலும் எனது மாமியார் "மக்கள் அணிந்திருக்கும் உடை அவர்கள் செய்ய நினைக்கும் ஒன்றில் இருந்து அவர்களை தடுக்கக்கூடாது" என்றும் கூறுவார்.

அவர் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை சொல்லப்போனால் இந்த விஷயம் புதிதாக அவர் வாழ்வில் சேர்ந்து ஒரு அர்த்தத்தை தருகிறது. இது அவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்தி இருக்கிறது.' 

பெண்கள் செய்யக்கூடாது என இந்த சமூகத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் சோமசுந்தரி மனோகரன் தனக்கு பிடித்ததை செய்து காட்டி சமூக பாகுபாட்டினை உடைத்து பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 


Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம்(Raji Akka)

Suggested Reading: டிசைனர் சிந்துவின் (Designer Sindhu) வாழ்க்கை பயணம்

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo

Suggested Reading: முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan⁠⁠⁠⁠⁠⁠⁠

அடுத்த கட்டுரை