/stp-tamil/media/media_files/xBmYsAnO0ZLbEu50sV8d.png)
"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" ஒரு பெண்ணாக உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை இதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிச்சயமாக பலமுறை கேட்டிருக்கக்கூடும். ஏனென்றால், பெண்கள் தங்கள் விருப்பங்களை சொல்ல கற்றுக் கொள்வதற்கு முன்பே அனுசரித்து செல்ல கற்றுக் கொடுக்கப்படுகிறது.
வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் படி அனைத்துமே நடக்காது. ஒரு சில இடங்களில் நாம் அனுசரித்து செல்ல தான் வேண்டும். அதுவே சரியும் கூட. எல்லாம் நம் வசதி கேட்ப இருக்காது. ஆனால் பெண்ணாக பிறந்ததை மட்டுமே காரணமாக காட்டி ஒருவரை வாழ்க்கை முழுவதும் அனுசரித்து செல்ல சொல்ல முடியாது.
ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் தனது தேவைகள் மற்றும் விருப்பங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஒரு வீட்டில் ஆண், பெண் சகோதர சகோதரிகளாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிறது. அவள் உணவு, கல்வி, சுதந்திரம் என அனைத்திலும் அவள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அவள் ஒரு பெண்.
இருபது வயதை அடைந்தவுடன் அவள் ஆசை, கனவு என அனைத்தையும் கைவிட்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவளை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இந்த சமூகமும் அதற்கேற்றவாறு பெண்களுக்கு உரிய வயதில் திருமணம் செய்யவில்லை எனில் அவளையும், அவள் குடும்பத்தையும் ஏளனமாக பேசும். அதற்கு பயந்தே பல குடும்பங்களில் பெண்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அனுசரித்துக் கொள்ளும் ஒரு நல்ல மருமகளாகவும், மனைவியாகவும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பெண்களையே இந்த சமூகம் சிறந்த பெண்ணாக போற்றுகிறது. இந்த மாதிரியான சமூக எண்ணங்கள் எப்பொழுது மாறும்? ஒரு பெண் எப்பொழுது அவளுக்காக வாழ்வாள்? அவள் விருப்பத்தின் படி வாழ அவளுக்கு எப்பொழுது சுதந்திரம் கிடைக்கும்?
முன் கூறிய மாதிரியே வாழ்க்கையில் அனுசரிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். ஆனால் வாழ்க்கையில் ஒருவர் அனுசரித்து செல்வதற்கு ஒரு வரம்பு உள்ளது. அந்த வரம்பு தான் சுயமரியாதை. ஒருவர் தன் சுயமரியாதையை இழக்கும் அளவிற்கு அனுசரித்து செல்லக்கூடாது. எந்த ஒரு தியாகமும், உறவும், வேலையும் உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவிற்கு முக்கியமான ஒன்று அல்ல. ஏனெனில், சுயமரியாதையை இழப்பது ஒருவரின் தனித்துவம் மற்றும் உணர்வை இழப்பதற்கு சமம்.
இங்கு நம் சமூகத்தில் பெண்களின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதான் பிரச்சனை. ஒரு ஆணின் வாழ்க்கையில் அவளுடைய பங்களிப்பின் அடிப்படையில் தான் இந்த உலகம் அவளை மதிப்பிடுகிறது. ஒரு ஆணை எவ்வளவு அனுசரித்து செல்கிறாளோ அவ்வளவு தகுதியானவள். அவளது தனித்தன்மை இந்த சமூகத்தில் தேவையில்லை. அனுசரித்து செல்வது தான் அவளது தலையாய கடமை என கருதப்படுகிறது.
ஏன் சமூகம் பெண்களை மட்டும் அனைத்திலும் அனுசரித்து செல்ல சொல்கிறது? சமூகத்தால் ஒரு ஆணின் எந்த ஒரு பெரிய அனுசரித்தல் இல்லாமல் இயங்க முடியும் எனில் பெண்களை ஏன் கல்வி, கனவு, திருமணம் என அனைத்திலும் பாரபட்சமாக நடத்துகிறது?
சமூகம் மற்றும் குடும்ப அமைதியை காப்பதற்காக சுயமரியாதையை இழந்து அனுசரித்து செல்ல வேண்டும் என்று கூறுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையும், பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களையும் எதிர்த்து குரல் கொடுக்கும் நேரம் இது. பெண்களின் சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. சமூக சமத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும். அதுவே பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை அமைக்க நமக்கு உதவும்.
பாலின அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை உடைக்கும் போது தான், நாம் சமூக சமத்துவத்தை நோக்கி முன்னேறுவோம். பெற்றோர்கள் தங்கள் மகள்களை அனுசரித்து செல்ல சொல்வதற்கு முன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு பெண் பொறுமையாக இருப்பதற்காக குடும்பங்கள் அவளை உதாசினப்படுத்த கூடாது. நம் சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களை சுதந்திரமாக, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ விட வேண்டும். இவ்வாறு நடந்தாலே அடுத்த தலைமுறையின் எதிர்காலம் சிறந்ததாக இருக்கும்.