போன கட்டுரையில் கிடைத்த வரவேற்புக்கு இனங்க இன்னும் எந்த மாதிரியான கேள்விகளை உங்கள் வருங்கால கணவரிடமோ மனைவியிடமோ நீங்கள் திருமணத்திற்கு முன்னரே கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்பதை கூற உள்ளேன். நாம் ஒரு உறவுக்குள் செல்லும் முன்னே இருவரை பற்றிய தெளிவான புரிதல் இருப்பது மிகவும் அவசியமாகும். அது வருங்காலத்தில் எந்த பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். முன்னரே எந்த ஒரு எதிர்பாராத தடைகள் வந்தாலும் அதை எப்படி அவரவர் கேட்ப சமாளிக்கலாம் என்ற தெளிவு வந்துவிடும். இது நிம்மதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுடைய புரிதல் என்ன?
குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரு செயல் அல்ல என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பதில் தாய்க்கு என்று ஒரு கடமை இருக்கிறது என்றால் தந்தைக்கும் அதே அளவிலான கடமை இருக்கிறது. தாய் தந்தை இருவரிடமே சமமான உழைப்பு என்பது குழந்தை வளர்ப்பில் தேவை. ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின் ஒரு பெண்ணின் உடலில் பல வகையான மாற்றங்கள் இருக்கும். உடல் மட்டுமல்லாமல் மனநலம் சம்பந்தமான பிரச்சினைகளையும் அவள் சந்திக்க நேரிடும். இவையும் தாங்கிக் கொண்டு தன் பிள்ளையையும் அவள் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் தாயின் மனநிலையை புரிந்து அதற்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் அந்த சமயத்தில் தாய் வேலைக்கு செல்பவராக இருந்தால் வேலையை தொடர போகிறாரா அல்லது குழந்தையை பாதுகாப்பதற்காக வேலையை விடப் போகிறார்கள் என்பதை பேசி முடிவு செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து முடிவு செய்யுங்கள்.
தனிமையை எப்பொழுதெல்லாம் விரும்புவீர்கள்?
அனைவருக்கும் தனக்கான நேரம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். என்னை பொருத்தவரை எனக்கு private space என்று தனியாக எதுவும் இல்லை. அதாவது நான் எப்பொழுதும் தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன். ஆனால் நான் தனியாக இருக்கும் பொழுது என் கணவருடன் மட்டும்தான் அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைப்பேன். என் கணவருக்கோ அவர் தனியாக இருக்கும் நேரத்தில் அவருடைய எண்ண ஓட்டங்களோடு சற்று அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அந்த இடத்தில் அவர் என்னை எதிர்பார்க்க மாட்டார். இதை நான் புரிந்து கொண்டதால் அந்த சமயத்தில் அவரை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். அதேபோல் நான் தனிமையில் இருக்கும் பொழுது அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதை அவர் புரிந்து கொண்டு என்னுடன் நேரத்தை செலவிடுவார். எனவே இந்த புரிதல் என்பது communication சரியாக இருந்தால் மட்டுமே வரும். எதையும் உங்களுக்குள்ளேயே போட்டு குழப்பிக் கொள்ளாமல் அதற்கு உரியவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணத்தின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?
காதல் என்பது ஒருவரிடம் வாழ்க்கை முழுவதும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அனைவருக்கும் திருமணத்தின் மேல் இருக்கும் பார்வை என்பது வேறுபடும். என்னை பொறுத்தவரை, திருமணம் என்பது இருவரும் சேர்ந்து வாழ்க்கையின் பயணத்தை அழகாக செதுக்குவது தான். இதில் பல ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த தம்பதியினருக்கான அடையாளம். இந்த புரிதல் இருந்தாலே நம் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையையும் சமாளித்து விடலாம். அதற்காக அனைவருக்கும் திருமணத்தின் மேலான பார்வை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இப்படி இருந்தால் வருங்காலத்தில் எந்த பிரச்சனையையும் சுலபமாக சந்தித்து அதற்கான விடையை தெளிவாகப் பெறலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டு வருடத்திற்கு முன்பு என்னிடம் திருமணத்தைப் பற்றி யாராவது கேட்டார்கள் என்றால் அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஆனால் எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்தில் என்னால் இவ்வளவு விஷயத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையை அழகாக வழிநடத்த முடிகிறது என்றால், அதற்கு காரணம் என் கணவர் தான். எனக்கு தெரியாத விஷயத்தை அவர் பொறுமையாக எடுத்துக் கூறியதால் தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன். எதுவும் தெரியாமல், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளேன் என்றால், உங்களாலும் அது முடியும்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-1515246
https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-arranged-marriage-1513025
https://tamil.shethepeople.tv/health/how-to-get-rid-of-dark-circles-1516351
https://tamil.shethepeople.tv/society/things-you-need-to-discuss-with-your-parents-1511012