சுதந்திரம் தான் பெண்மையின் பொதுமொழி! அது… படிக்கும் படிப்பிலிருந்து திருமணம் வரை, ஒரு குடும்பத்தின் விருப்பமாக இருக்கிறதே தவிர, அவளின் சுய விருப்பமாக இருப்பதில்லை.
"சுதந்திரம்"…
குடிமக்களின் சுதந்திரம் அரசின் பிடியிலும்,
மாணவர்களின் சுதந்திரம் நிர்வாகத்தின் பிடியிலும்,
பெண்களின் சுதந்திரம் சமூகத்தின் பிடியிலும், சுழன்று கொண்டிருக்கிறது.
மின்னல் வேகத்தில் காலம் மாறினாலும், அதை காட்டும் கடிகாரமுள், அன்று ஒரு வட்டத்திற்குள்ளும், இன்று ஒரு மொபைல் போனுக்குள்ளுமாய், தேங்கி இருக்கிறது பெண்களின் சுதந்திரம். ஒரு ஆண் கனவை அடைய துணையாக இருக்கும் பெண்ணின் கனவுகள், கூட்டிற்குள் சிக்கிய பட்டாம்பூச்சியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.
இங்கு, துயரமான நிதர்சனம் என்னவென்றால், பெண் மனம் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை, ஒரு பெண்ணாலே வழங்க முடிவதில்லை. ஏனென்றால், "அம்மாவிற்கு புரியாது ஒரு மகளின் சுதந்திரம் எதுவென்று, மாமியாருக்கு புரியாது மருமகளின் சுதந்திரம் எதுவென்று".
காலத்தின் கட்டாயத்தாலும், கூடே பயணிக்கும் கண்களுக்கு விளங்காத ஆண் ஆதிக்கத்தாலும், தங்களை தாங்களே தாழ்வாக எண்ணிக்கொள்ளும் எண்ணம், ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் உருவாகிறது. "அதிகப்படியான பாதுகாப்பு" என்ற பெயரில், ஒவ்வொரு பெற்றோரும், கணவன்மார்களும் செய்வது ஒருவிதமான தடை என்பதை உணர வேண்டும்.
பொம்பள புள்ள- "வெளிய போகக்கூடாது, விளையாடக்கூடாது, நீல முடி இருக்கணும், கட்டான உடல் இருக்கணும், சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கணும், உடனே குழந்தை பெத்துக்கணும், வேலைக்கு போகக்கூடாது" என்று பல கருத்துகளை பெண்களின் மேல் வைத்திருக்கும் இச்சமுகத்திற்கு ஏன் ஆண்களின் மேல் எந்த கருத்தும் இல்லை.
ஒரு கணவனை மனைவி புரிந்து கொண்ட அளவிற்கு, மனைவியை கணவன் புரிந்து கொள்வதில்லை. ஒரு பெண்ணின் சப்-கான்ஷியத்திலும், கொடுக்க முடியாத ஒரு அன்பு, வார்த்தை, தாய்மை, நேசம், கோபம், தயக்கம் என பல உணர்வுகள் மறைந்திருக்கிறது.
இவை அனைத்தையும் தாண்டி, உயர் பதவிக்கும், நினைத்த வேலைக்கும், சென்ற சாதிக்கும் பெண்களின் சதவீதம் குறைவே என்றாலும், அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணிற்கும் ஓர் உத்வேகமே!
இந்திரா நூயி, மம்தா பானர்ஜி, கமலா ஹரிஷ், என இன்றைக்கு இந்தியாவின் பெண் தலைவர்களாக விளங்கும் இவர்களின் சுதந்திர எண்ணத்தை நாம் அடைய என்ன செய்ய வேண்டும்?
- உங்களுக்கென ஒரு SWOT ANALYSIS-ஐ உருவாக்குங்கள்!
SWOT ஆய்வு என்பது ஒரு திட்டமிடல் முறையாகும். இது உங்களை சுயபரிசோதனை செய்ய உதவும். உங்களின் பலத்தையும் (Strength), பலவீனத்தையும் (Weakness), வாய்ப்புகளையும் (Opportunity), அச்சுறுத்தல்களையும் (Threats), மதிப்பிட உதவும். - வாழ்க்கையின் அர்த்தத்தை உணருங்கள்!
SWOT ஆய்விற்குப் பிறகு, உங்கள் மனதிற்குள் இருந்த குழப்பம் அனைத்தும் நீங்கி, ஓர் நோக்கம் (Purpose) உருவாகும். அதை நோக்கி பயணிக்க தேவையான வழிகளை தேடுங்கள். வனங்களை மிருகங்களைக் கடந்த பயணமாக இருக்கும் அந்த வழி. உங்கள் Choice-ஐ தேர்வு செய்யுங்கள். அதன் Consequences -ஐயும் புரிந்து கொண்டு, எதையும் சந்திக்க தயாராகுங்கள். - Secret Sauce-ஐ கண்டுபிடிங்கள்!
உங்கள் சுதந்திரம் உங்களிடம் தான் உள்ளது. அதை முதலில் நீங்கள் உணர்ந்த பின் தான் மற்றவருக்கு புரிய வைக்க முடியும். உங்களுக்குப் பிடித்த, நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருகின்ற வேலையை தேர்ந்தெடுங்கள். பின் அதை எந்த வருத்தமும் இல்லாமல், தாயைப் பற்றிக் கொள்ளும் கைக்குழந்தையை போல் பற்றி கொள்ளுங்கள். - மாறலாம்! சமுதாயம் கொண்டாடும் பெண்ணாய்!
சாதனையாளர்கள் பட்டியலில் இன்று அனைவராலும் கொண்டாடப்படும் ஒவ்வொரு பெண்ணும், முதலில் எதிர்ப்பை சந்திப்பது அவள் குடும்பத்தில் தான். பணியிடம் முதல் சமூகம் வரை பெண்கள் சாதிக்க வேண்டி இருக்கிறது. மூடநம்பிக்கை, சமூக வேறுபாடு, என பல இன்னல்களை ஒவ்வொரு பெண்ணும் சந்திக்க வேண்டி இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, உங்களுக்குள் இருக்கும் அந்த சக்தியை வெளிப்படுத்த, நீங்கள் நினைத்ததை நடத்தி முடிக்க, முதலில் உங்கள் மனக்கூட்டை விட்டு வெளியே வந்து "நான்" என்னும் பறவையாய் பறந்து "இறைவி"யாய் ஒளிருங்கள்!
Suggested Reading: Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை
Suggested Reading: Arranged marriage செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!