/stp-tamil/media/media_files/uoW5AC5xaC4PGjjqeaa4.png)
சாதாரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த மாற்றங்கள் திருமணத்திற்கு பிறகு அதிகரிப்பது உண்டு. குறிப்பாக திரை உலகில் கதாநாயகியாக இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் எதிர்கொள்வதை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். அதேபோல் தான் ஜோதிகாவும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். பிறகு 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்தார்.
திருமணம் ஆகிய ஒரு பெண் சிறிது இடைவெளி எடுத்த பிறகு மீண்டும் தொழிலுக்கு திரும்புவது மிகவும் குறைவு. அதுவும் திரையுலகில் திருமணமான ஒரு பெண்ணிற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக தான் வரும் என்ற பரவலான கருத்தும் இருக்கிறது. ஆனால், இந்த தடைகளை எல்லாம் உடைப்பது போல் ஜோதிகா மீண்டும் திரை உலகிற்கு வந்த பிறகு முன்பை விட அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. அதற்கான காரணம் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களும், அதன் கதாபாத்திரங்களும்.
பெண்களை மையமாக கொண்ட கதைகளை உருவாகத் தொடங்கிய நேரத்தில் பெண்களையும், திருமணமான பெண்களையும் ஆதரிக்கும் வகையில் ஜோதிகாவிற்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவற்றுள் சில கதாபாத்திரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
36 வயதினிலே:
இந்தத் திரைப்படம் ஜோதிகாவிற்கு சிறந்த ஒரு கம்பாக்கு(comeback) திரைப்படமாக இருந்தது. ஏனெனில், இந்தத் திரைப்படம் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றிய படம் என்பதால் ஜோதிகாவினால் அவர்களின் வாழ்க்கையை இதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. திருமணமான ஒரு பெண்ணிற்கு எந்த ஆசைகளும், கனவுகளும் இருக்கக் கூடாது என்றே இந்த சமூகம் நினைக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு திருமணமான பெண்ணின் ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றுகிறாள் என்றும் திருமணம் ஆவதற்கு முன் ஒரு பெண்ணின் வாழ்க்கையும், திருமணம் ஆனதற்கு பின் அவர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதையும் இந்த படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரம் மூலம் ஜோதிகா நடித்திருப்பார்.
மகளிர் மட்டும்:
இந்தத் திரைப்படத்தின் பேருக்கு ஏற்றது போலவே திருமணமான பெண்களின் வாழ்க்கை பற்றிய கதை இது. 3 பெண்கள் 38 ஆணைகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து அவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுக்கின்றனர். இந்த மூவரும் இளம் வயதில் எப்படி இருந்தார்கள், திருமணத்திற்கு பிறகு அவர்களின் நிலைமை என்ன, குடும்பத்தினர்களிடம் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பதை எல்லாம் இந்த படம் சித்தரிக்கிறது. இந்த மூவரையும் ஒன்று சேர வைப்பது ஜோதிகாவின் கதாபாத்திரம்.
காற்றின் மொழி:
காற்றின் மொழி, திருமணம் ஆன ஒரு பெண் அவள் அடையாளத்தை தேடும் கதை. இதில் பள்ளி பருவத்தில் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத ஒரு பெண்ணை அவர்கள் குடும்பத்தில் எப்படி தாழ்மையாக நினைக்கிறார்கள் என்றும், அவளுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க அவள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய கதை இது. இதில் கணவன் அவளுக்கு ஆதரவாக இருந்தாலும் சில சமயங்களில் அந்த ஆதரவையும் அவள் இழக்கிறாள். மீண்டும் இறுதியில் கணவரின் ஆதரவுடன் அவளுக்கு பிடித்த வேலையை அவள் செய்ய தொடங்குகிறாள்.
நாச்சியார்:
இந்த திரைப்படத்தில் ஜோதிகா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இதில் சாதாரணமாக ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூக விதியை உடைத்து நடித்திருப்பார். ஒரு பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது தான் இந்த கதை. ஒரு முரட்டுத்தனமான காவல்துறை அதிகாரியாக இருந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்.
ராட்சசி:
இந்த படத்தில் அவர் அரசு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து பல தடைகளை தாண்டி அந்த பள்ளிக்கு நன்மை செய்திருப்பார். நல்லது நினைப்பவர்கள் என்றாலே பெரும்பாலும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அதுவும் ஒரு பெண்ணாக இருந்தால் இந்த சமூகம் அவர்களை சற்று தாழ்த்தியே எடை போடும். இந்தப் படத்தில் ஒரு தைரியசாலி பெண்ணாக பல சவால்களை அவர் எதிர்கொள்வார். அதுமட்டுமின்றி அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தருவார்.
பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நாச்சியார், ராட்சசி போன்ற படங்களில் ஆண்கள் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தாலும் ஆண்களையே சித்தரிப்பர். இந்த திரைப்படங்களை தவிர்த்து ஜாக் பாட், தம்பி, பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்
ஆனால், திருமணம் ஆகி திரை உலகிற்கு வரும் பெண்கள் பெரும்பாலும் தோல்வி அடைவர் என்ற சமூகப் பின்பத்தை உடைத்தெரிவது போல ஜோதிகாவிற்கு மீண்டும் மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்கள் அமைந்தது. இந்த திரைப்படங்களின் மூலம் அவர் ஒரு சிறந்த கதாநாயகி என்பதை நிரூபித்துள்ளார். சாதாரணமாக சமூகத்தில் பெண்களும் இருக்கும் பிரச்சனைகளை குறிப்பாக திருமணமான பெண்களின் வாழ்க்கை கதையை தேர்வு செய்து நடித்ததால் அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.