/stp-tamil/media/media_files/qqVpU0fLBymFhVzHpGjC.png)
அனைவருக்கும் முதல் காதல் அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். காதலில் எந்தவிதமான அனுபவமும் இல்லாததால் அந்த முதல் காதல் தெரிந்தோ, தெரியாமலோ பிரிந்திருக்க கூடும். சிறு வயதிலிருந்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் நமக்கு பல விஷயங்களை கற்றுத்தந்திருப்பார்கள். ஆனால், காதல் பற்றியும், அந்த உணர்ச்சி பற்றியும் யாரும் எதுவும் கற்றுத் தருவதில்லை. ஒருவர் மீது காதல் வந்தால் அது உண்மையான காதலா அல்லது பருவத்தில் ஏற்படும் ஒரு சாதாரண ஈர்ப்பா என்று பலருக்கு தெரிவதில்லை.
கடந்த காலத்திற்கு சென்று ஏதேனும் ஒரு விஷயத்தை மாற்ற முடியும் என்றால் பலர் அவர்களின் முதல் காதலை தான் சிறப்பாக மாற்ற நினைப்பார்கள். அது அவர்களை மீண்டும் காதலிப்பதற்காக அல்ல காதலிப்பதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
முதல் காதலைப் பற்றி யாரும் சொல்லாத ஐந்து விஷயங்கள்
1. உங்களுக்கான நேரத்தை கேட்பது தவறில்லை:
நீங்கள் முதல் காதல் உறவில் இருக்கும் பொழுது அந்த உறவில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க அவர்கள் கூறுவதை எல்லாம் செய்ய நீங்கள் தயாராக இருக்கலாம். நீங்கள் செய்வது எல்லாம் அவர்களுக்கு பிடிக்குமா? இல்லையா? என்று யோசனையில் இருக்கலாம். உங்களுக்கான இடத்தை கேட்பது கூட தவறு என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் நீங்கள் இருவரும் தனிப்பட்ட நபர்கள். எனவே, உங்களுக்கான நேரத்தை கேட்பதில் தவறில்லை.
2. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:
சில சமயங்களில் மற்றவர்களின் தேவைகள் மற்றும் மகிழ்ச்சியை பற்றி சிந்தித்து அவர்களை நமக்கு முன் வைத்து அது தான் காதல் என்று நினைப்போம். ஆனால் முதலில் நீங்கள் உங்களை கவனிக்க வேண்டும். உறவுகளில் நீங்கள் மற்றவர்களுக்கு அனைத்தையும் விட்டுத் தருவதும் தவறு, மிகவும் தன்னலமாக இருப்பதும் தவறு. அன்பு என்பது எப்பொழுதும் அனுசரித்து செல்வது அல்ல. நீங்கள் உங்களை முதலிடத்தில் வைப்பதால் அவர்களை நேசிக்காமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.
3. நீங்கள் மரியாதைக்கு தகுதியானவர்:
மரியாதை என்பது ஒரு உறவை வளர்ப்பதற்கு தேவையான சக்தியாகும். உங்களையும் உங்கள் துணையையும் நீங்கள் மதிக்க வேண்டும், அவர்களிடமிருந்தும் அதே மரியாதையை எதிர்பார்க்க வேண்டும். மரியாதை இல்லாத உறவுகளில் பெண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். பெண்கள் பெரும்பாலும் காதல் என்ற பெயரில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில வன்முறைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு உறவில் மரியாதை இல்லை எனில் அது உங்களுக்கு நன்மையை தரப்போவதில்லை. எனவே, உங்கள் நல்வாழ்வுக்காக காதல் உறவில் இருவரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
4. காதலில் இருப்பதால் நீங்கள் அவர்களுக்கு முழு உடமையாக முடியாது:
ஒரு காதல் உறவில் இருப்பது உங்கள் வாழ்க்கையின் முழு அதிகாரத்தையும் அவர்களுக்கு ஒப்படைப்பதில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என அவர்கள் தீர்மானிக்க கூடாது. உங்களுக்கு பிடித்ததை அவர்கள் செய்யவிடாமல் இருப்பது அல்லது அவர்களுக்கு பயந்து நீங்கள் அதை செய்யாமல் இருப்பது இவையெல்லாம் ஒரு உறவிற்கு நல்லது அல்ல. நீங்களும் உங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்க அவர்களுக்கு அதிகாரம் தரக்கூடாது. அவர்கள் ஆலோசனை கூறலாமே தவிர, நீங்கள் இதை தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவது தவறு. நீங்கள் அவர்களை காதலிப்பதற்காக உங்களை அவர்கள் முழு உடமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
5. நீங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி மாற்ற முடியாது:
இதை அனைவரும் புரிந்து கொள்ள தவறுகின்றனர். ஒருவர் உங்களை மகிழ்ச்சிப்படுத்த மாறுவது போல் செயல்படலாமே தவிர, அவர்கள் உண்மையில் மாற விரும்பவில்லை என்றால் அது நிலையற்ற ஒரு மாற்றமாக இருக்கும். மாற்றம் என்பது உள்ளிருந்து வர வேண்டிய ஒன்று. ஒருவரை மாற்றும் படி கட்டாயப்படுத்துவது தவறு என நீங்கள் உணர வேண்டும். சில சமயங்களில் ஆண்கள் ஒரு பெண் அவர்களை காதலிக்க ஆரம்பித்த பிறகு சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறுவர். அதே மாதிரி பெண்களும் ஒரு ஆணை காதலிக்கும் போது மாற்றி விடலாம் என நினைப்பார்கள். இது இரண்டுமே ஒரு தவறான சிந்தனை. ஒருவர் அவர்களாகவே மாற விரும்பவில்லை என்றால் உங்களால் அவரை மாற்ற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களும் உங்களின் முதல் காதலின் போது யாரும் உங்களுக்கு சொல்லி இருக்க மாட்டார்கள். அனுபவம் இல்லாததால் உங்கள் முதல் காதலில் நீங்கள் சில தவறுகளை செய்திருக்கலாம். எனவே, இனி நீங்கள் காதலிப்பதற்கு முன் இந்த ஐந்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.