Advertisment

ஆண்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்

author-image
Devayani
21 Nov 2022
ஆண்களிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்

ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூகத்தில் நிறைய விதிமுறைகள் இருக்கிறது. சில சமயம் நம் சாதாரணமாக கேட்கும் கேள்வியோ, சொல்லும் சொற்களோ ஒரு தனிப்பட்ட நபரை பெரிய அளவில் பாதிக்கலாம். எனவே, ஆண்களிடம் இந்த ஐந்து விஷயங்களையும் சொல்லாதீர்கள். 

Advertisment

1. ஆம்பள பிள்ளையா இருந்துட்டு அழக்கூடாது:

சமூகம் எல்லாம் சூழ்நிலையிலும் ஆண்கள் உணர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. அது வெளிப்படையாய் எழுவது, புலம்புவது, பயப்படுவது, ஏன் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பது இது போன்ற செயல்களை அவர்கள் செய்யக்கூடாது என கூறுகிறது. இந்த செயல்கள் எல்லாம் பெண்களுக்குடையது என இந்த சமூகம் கூறுகிறது. அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளையும், பிரச்சனைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் ஆண்களின் மன ஆரோக்கியம் மோசமடைகிறது. எனவே, நாம் ஆண்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் அன்புக்குரியவர்களிடம் அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போதெல்லாம் பிரச்சனையை கூறி மன ஆறுதலை பெற ஆதரவு அளிக்க வேண்டும். 

2. ஆண்கள்தான் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும்:

ஆண்கள் தான் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என சமூகம் கூறுகிறது. ஆண்கள்தான் நல்ல வேலைக்கு சென்று, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே சிறுவயதில் இருந்து நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஒரு நல்ல வேலை இல்லையெனில் திருமணம் செய்து கொள்வது கடினம் என கூறி சிறு வயதிலேயே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. திருமணத்தில் அழுத்தம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமானது. பெண்களை வீட்டு வேலை செய்ய கற்றுக்கொள்ள வற்புறுத்துவது போல் ஆண்களையும் நல்ல வேலைக்கு செல்ல சொல்கின்றனர். விரைவில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய தியாகம் செய்ய வேண்டி உள்ளது. இது அவர்களுக்கு ஒரு சுமையாக மாறுகிறது. எனவே, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சுமையாக இல்லாமல் நிதி சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

3. ஆண்கள் முழு நேரம் வீட்டிலிருந்து வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ளக்கூடாது:

ஒரு வீட்டில் கணவர் போதுமான அளவு சம்பாதித்தால் மனைவியை வேலையை விட்டு வீட்டை பார்த்துக் கொள்ள இந்த சமூகம் ஊக்குவிக்கிறது. ஆனால், அதே போல் மனைவி போதுமான அளவு சம்பாதித்தால் கணவன் வேலையை விட்டு வீட்டை பார்த்துக் கொள்வது அசிங்கம் என இந்த சமூகம் கூறுகிறது. ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தனிப்பட்ட உரிமை. ஆனால், ஆண்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒரு குடும்பம் நிறைவாக இருக்க ஆண் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது சமூக வழக்கமாக உள்ளது. இந்த பாலியல் பாரபட்சம் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்ற உரிமையை பறிக்கிறது.

4. பெற்றோர்களை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்:

ஆண்கள் சிறுவயதில் இருந்தே நன்றாக படிக்கவும், வேலைக்கு செல்லவும் வற்புறுத்தப்படுகிறார்கள். பெற்றோர்களின் கடைசி காலத்தில் ஆண்கள் தான் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களை பார்த்துக் கொள்வது குழந்தைகளின் கடமை தான். ஆனால், அந்த கடமையை ஆண்கள் மேல் மட்டும் திணிக்க கூடாது. குடும்பத் தேவைக்காக மகள்களும் சேர்ந்து பெற்றோர்களை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். அதற்கு சிறுவயதிலிருந்தே ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் சமமான உரிமையை கொடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல் திருமணம் முடிந்த உடனே ஆண்களை குடும்பத்திற்கு வாரிசு பெற்ற தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். குழந்தை பெற்ற பிறகு ஒரு பெற்றோராக அவர்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது. அதனால் அவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அந்த ஆணும் அவன் துணையும் முடிவெடுக்க வேண்டும். 

5. ஆண்கள் அலங்காரம் செய்து கொள்ளக்கூடாது:

எப்பொழுதும் ஒரு ஆணை திட்டுவதற்கும் இல்லை அவனை அவமானப்படுத்துவதற்கும் பெண் என்ற சொல்லும் பெண்களை சார்ந்த சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானிப்பது யார்? கடவுள்களும், அரசர்களும் அலங்காரம் செய்து நகை அணிந்து கொள்வதை நாம் அழகு என வர்ணிக்கிறோம். ஆனால், அதையே ஆண்கள் செய்தால் அவர்களை கொச்சைப்படுத்துகிறோம். நகைகள் அணிவது, அலங்காரம் செய்து கொள்வது எந்த தனிப்பட்ட பாலினத்தையும் சார்ந்தது இல்லை. அதை செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பது தனிமனித உரிமை.

Advertisment
Advertisment