/stp-tamil/media/media_files/Hwth2CQPw5CGFutJgSc4.png)
தற்போது மாறி வரும் காலகட்டத்தில் எல்லா ஆண்களும் பழமை வாய்ந்த ஆணாதிக்க சிந்தனையில் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. பலர் அந்த ஆணாதிக்க சிந்தனைகளில் இருந்து வெளிவந்து அவர்களின் மனைவிக்கு உதவி வருகின்றனர். ஒரு பெண்ணை மனைவி, தாய், மருமகள் என்ற பாத்திரத்தில் மட்டும் வைக்காமல் ஒரு தனிப்பட்ட நபராகவும் அவர்களின் ஆசைகளையும், கனவுகளையும் மதிக்கும் ஆண்களும் இருக்கின்றனர். பல பெண்கள் பணி இடைவேளைக்குப் பிறகு அல்லது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு வேலைக்கு திரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக கணவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று அர்த்தம்.
வீட்டு பொறுப்பையும், குடும்ப பொறுப்பையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்:
காலம் காலமாக பெண்கள் ஆண்களை ஆதரித்து வருகின்றனர். பெண்கள் முழு வீட்டையும் பொறுப்பேற்றுக்கொண்டு கணவனின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றனர். பெண்ணுக்கு அது சம்பளம் இல்லாத மற்றும் ஓய்வு இல்லாத வேலையாக இருந்த போதும் ஆண்கள் வேலையில் இருந்து சம்பளத்தையும், அவ்வப்போது ஓய்வையும் பெற்றனர். ஆனால், இப்பொழுதும் அவர்கள் அப்படி இருக்க கூடாது. ஏனென்றால், பெண்களும் வீட்டை விட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். பெண்களுக்கு அவர்கள் நோக்கத்தை மதித்து நிறைய வேலை வாய்ப்புகள் திறக்கப்படுகிறது. எனவே, அவளது கணவரிடம் இருந்து, அவள் அளிப்பது போலவே ஆதரவை எதிர்பார்க்கிறாள். வீட்டையும் குடும்பத்தையும் எப்பொழுதும் ஒருவராக பார்த்துக் கொள்வது கடினம். எனவே, இந்த பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆண்கள் ஏன் தங்கள் மனைவியை ஆதரிக்க வேண்டும்?
ஏனெனில், சில சமயங்களில் ஒரு தொழில் அல்லது வேலை என்பது பெண்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல அவை அவர்களுக்கு பூர்த்தி அளிப்பதாகவும், அவர்களுக்கு பிடித்ததை செய்யும் மன திருப்தியை அளிப்பதாக இருக்கிறது. இந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் கல்வியை கற்றுக் கொள்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் வேலைக்கு செல்கிறார்களா என்று கேட்டால் இல்லை. மிகவும் குறைவான பெண்களே திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்கின்றனர். கல்வி தகுதி உள்ள ஒரு பெண் ஏன் வெறும் வீட்டு வேலைகளை மட்டும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் வேலை பார்க்கும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், வீட்டை கவனிப்பதை விட அதிகமாக வேலை செய்ய தயாராக இருக்கும் பெண்களை ஏன் வீட்டிலேயே அடைத்து வைக்க வேண்டும்?
பெண்களுக்கு பண சுதந்திரம் முக்கியம்:
பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்க எப்பொழுதும் ஆண்களிடமே பணம் கேட்க வேண்டியுள்ளது. செலவிட்ட பணத்திற்கு கணக்கு காட்டவும் உத்தரவிடப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் செலவிடும் பணத்திற்கு கணக்கு கேட்பதில்லை. அது ஒரு சாதாரண விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் செலவு செய்தால் அதற்கான கணக்கை கேட்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் நிறைய அனாவசிய செலவு செய்வதாகவே கருதப்படுகிறது. கணவன்களும் அவர்களின் பணத்தை தர யோசிப்பது உண்டு. இப்படி இருக்கும் சமூகத்தில் அவள் ஒரு வேலைக்கு சென்றால் அவள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து அவளுக்கு தேவையான பொருட்களை அவள் வாங்கிக் கொள்வாள். பணத்திற்காகவும், சிறு சிறு விஷயத்திற்காகவும் யாரையும் அவள் எதிர்பார்த்திருக்க தேவையில்லை. மற்றவர்களின் ஆதரவு இன்றி அவளால் அவளை பார்த்துக் கொள்ள முடியும்.
ஏன் ஆண்கள் வீட்டு வேலையில் பங்கு கொள்ள வேண்டும்?
பல காலங்களாக ஆண்கள் வெளி வேலையை பார்த்துக் கொள்வதும், பெண்கள் வீட்டு வேலையை பார்த்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்கு சென்றால்தான் குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ள முடிகிறது. பெண்கள் வேலைக்கு சென்று ஆண்களின் பொறுப்பில் பங்கு கொள்வது போலவே ஆண்களும் பெண்களின் வீட்டு வேலை பொறுப்பில் பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு இருவரின் வேலைகளிலும் பங்கு எடுத்துக் கொள்வதன் மூலம் இருவருமே மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியும். அது இந்த சமூகத்தை ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழகானதாய் மாற்றும்.