/stp-tamil/media/media_files/vgc0LKxvHkg0pZYULVZq.png)
Image is used for representational purpose only
எத்தனை பேர் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசும் பொழுது முகத்தை சுழித்திருப்போம். கண்டிப்பாக நமக்கு இந்த அனுபவம் இருக்கும். ஏனென்றால், இந்த சமூகத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடுவது ஒருவரை ஊக்குவிக்கும் விதம் என கருதப்படுகிறது. படிப்பிலும், வேலையிலும் ஒருவரை ஒப்பிட்டுக் கொள்வது தான் அவர்களின் வாழ்க்கை இலட்சியத்தை கண்டுபிடிக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மனிதரை ஊக்குவிக்கிறதா? அது ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதை விட மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது அவர்களைவிட உயர்ந்து இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.
மற்ற குழந்தைகளின் வெற்றியுடன் ஒப்பிடுவது:
இந்த சமூகத்தில் வெற்றி தான் ஒரு மனிதனின் மதிப்பை முடிவு செய்கிறது. ஒரு வெற்றி பெற்ற மனிதரையே மதிப்புடன் இந்த சமூகம் போற்றி புகழ்கிறது. இந்த வெற்றி பெற்றவர் சமூகம் கூறுவதை கேட்பவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் சமூக விதிகளில் இருந்து மாறி வேறு விஷயங்களை செய்து தோல்வி அடைந்தால் அவர்களை இந்த சமூகம் தாழ்த்தி விமர்சிக்கிறது. "நீ ஜெயிச்சிருவனு சொன்னா இந்த உலகம் நம்பாது. ஆனா ஜெயிச்சுட்டு சொன்னா இந்த உலகம் கேட்கும்" கனா படத்தில் வரும் இந்த வசனத்தை போல ஜெயித்தவர்களின் வார்த்தைகளுக்கு தான் இந்த சமூகத்தில் மரியாதை உள்ளது.
அதனாலேயே குடும்பங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை விட நிறைய சாதிக்க சொல்கிறது. அதேபோல் நன்றாக படிக்கும் குழந்தைகள் மீதும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் தானாகவே மரியாதை வந்துவிடுகிறது. கம்மியாக மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இந்த சமூகம் தாழ்த்தியே பேசுகிறது.
"பக்கத்து வீட்டு பொண்ணு/பையன பாரு எவ்வளவு மார்க் வாங்கி இருக்காங்க, அவன பாரு எவ்வளவு சம்பளம் வாங்குறான், உன் கூட தான அந்த பிள்ளயும் படிக்குது அது மட்டும் எப்படி நல்ல மார்க் வாங்குது, உன் வயசு தானே அந்த பிள்ளைக்கு அந்த பிள்ளை மட்டும் எப்படி தங்க பதக்கம் வாங்குது" இது போன்ற சொற்களை நமது பெற்றோர்கள் கூறி நாம் கேட்டிருப்போம்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
பெற்றோர்கள் மற்ற குழந்தைகளின் வெற்றிகளை பார்க்கும் ஆர்வத்தில் அவர்கள் குழந்தைகளின் முயற்சிகளையும், சிறு சிறு முன்னேற்றங்களையும் பாராட்ட மறந்து விடுகின்றனர். இந்த மாதிரி ஒப்பிடுவதால் குழந்தைகள் அவர்களின் தனித்துவத்தை இழக்கின்றனர். குழந்தைகள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களின் மனநலம் மற்றும் சிந்தனைகளை பாதிக்கும். அவர்கள் மீண்டும் முயற்சிக்க ஊக்கமில்லாமல் இருப்பார்கள். தொடர்ந்து அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மூலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார்கள். அது தன்னம்பிக்கையை இழக்கவும் நேரிடும்.
எந்த ஒரு நபரும் தன்னை பிறருடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லை. மற்றவர்களுடன் அவர்களை ஒப்பிடுவதை விட அவர்களின் முயற்சியை பாராட்டுவது ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும். வெற்றி என்பது அனைவருக்கும் ஒன்று அல்ல. அதே மாதிரி ஒரே சமயத்தில் அனைவருக்கும் வெற்றி கிடைக்காது. அப்படி இருக்க மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு தனிப்பட்ட மனிதரின் வளர்ச்சியை பாராட்ட வேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு திறன்கள், திறமைகள் உள்ளன. நம் சொந்த வரம்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது ஒருபோதும் நல்ல யோசனையல்ல. ஆலோசனை மற்றும் உத்வேகத்திற்காக ஒரு வெற்றிகரமான நபரை ஒருவர் பார்க்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால் குறைந்த வெற்றி பெற்ற நபரை குறைத்து மதிப்பிடாமல் அல்லது மிகவும் வெற்றிகரமான நபரை முன்னிலைப்படுத்தாமல் இதைச் செய்ய வேண்டும்.
உத்வேகம் தேடுவதற்கும், மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது - ஒன்று ஆக்கபூர்வமானது மற்றொன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து ஒப்பிடுவது ஆபத்தானது மற்றும் மனதளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஒரு நபரை குழந்தை பருவத்தில் பாராட்டுவது முக்கியம். மற்றவர்களின் வெற்றியைப் பாராட்டுங்கள், ஆனால் அவர்களுடன் போட்டியிட வேண்டாம். உங்கள் இதயத்தில் பொறாமை அல்லது தாழ்வு மனப்பான்மை இல்லாமல் அவர்களின் கடின உழைப்பிற்காக அவர்களை முழு மனதுடன் பாராட்டுங்கள். வெற்றி பெற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு தாழ்த்தி நினைக்காமல், அவர்களை ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.