60 ஆண்டு கனவை நிறைவேற்றிய 84 வயது லலிதாம்பாள்

Devayani
16 Feb 2023
60 ஆண்டு கனவை நிறைவேற்றிய 84 வயது லலிதாம்பாள்

புவியியல் மற்றும் வரலாறு ஆசிரியரான எஸ். லலிதாம்பாள் பல காலமாக உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை உடன் இருந்தார். ஆனால் வாழ்க்கை சந்தர்ப்பங்கள் அவரை அதற்கு அனுமதிக்கவில்லை. கோயம்புத்தூரை சேர்ந்த இவர் 60 ஆண்டுகளாக இந்தியாவை விட்டு வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். தற்போது அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு வெளிநாடு பயணம் சென்றுள்ளார். இந்தப் பயணம் அவரை மட்டும் மகிழ்விக்கவில்லை, அவரது கனவை நினைவாக்க உதவிய குடும்பத்தினரையும் மகிழ்வித்துள்ளது. SheThePeople உடன் நடந்த நேர்காணலில் அவர் கூறிய சில விஷயங்கள்.

எண்பது வயதில் பாஸ்போர்ட் வாங்கும் அனுபவம் எப்படி இருந்தது?

லலிதாம்பாளுக்கு உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் தனது வேலையையும், குடும்பத்தின் பொறுப்புகளையும் சிறு வயதில் இருந்தே முன் உரிமையாக வைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை பயணத்தை பற்றி கேட்டபோது அவர் "பணரீதியாக சில போராட்டங்கள் இருந்தது. அதேபோல் வாழ்க்கையில் மற்ற விஷயங்களை நான் முன்னுரிமையாக கொண்டிருந்தேன். எனவே, எனது குடும்பத்தின் எதிர்காலத்தை சிறப்பாக்குவதற்காக நான் உழைத்தேன். நான் எப்பொழுதும் என்னால் பயணம் செய்ய முடியுமா என்று நினைத்திருக்கிறேன். இருப்பினும் எனக்காக பாஸ்போர்ட் வாங்கும் முயற்சியை நான் எடுத்ததில்லை."

அவரின் பேத்தியான காவியா நெதர்லாண்டில் சிறிது காலத்திற்கு முன்பு செட்டில் ஆகியுள்ளார் மற்றும் தனது பாட்டியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. "அவள் இதற்காக பணத்தை சேமிக்க தொடங்கினாள். அவளுடைய முதல் முயற்சி என்னவென்றால் என்னை அங்கு அழைத்து சென்று இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகத்தை எனக்கு காண்பிப்பது. நான் எனது கணவரை 2020ல் இழந்தேன். எனது பயணமும் covid காரணமாக தாமதமானது. பிறகு 2021ல்  காவியா தனது தாயான மேகலாவை, அதாவது என்னுடைய மகளை எனக்காக பாஸ்போர்ட் எடுக்க பதிவு செய்ய சொன்னாள். எனது பத்தாம் வகுப்பு தேர்வு சான்றிதழை கண்டுபிடிப்பது இன்னொரு சவாலாக இருந்தது. எல்லாம் நல்லபடி சென்று தற்போது 83 வயதில் என்னுடைய முதல் பாஸ்போர்ட்டை நான் என் கைகளில் ஏந்தி கொண்டு இருக்கிறேன்".

dream come true⁠⁠⁠⁠⁠⁠⁠

இந்த பயணம் உங்களுக்கு என்ன கற்று தந்தது?

அவருக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சி அளித்ததா என்று கேட்டபோது, "நிச்சயமாக நான் ஆரம்பத்தில் சிறிது தயக்கமாக இருந்தாலும், வேறு இடத்திற்கு செல்வதற்கு சிறிது பயமாக இருந்தாலும் எனது குடும்பத்தினர்கள் என்னை சாந்தப்படுத்தினர். ஜூன் 2022ல் நான் ஆம்ஸ்டர்டாமில் இறங்கினேன்". லலிதாம்பாள் அவருடைய மகளுடன் யூரோப்பிற்கு சென்று அங்கு மூன்று மாதங்கள் இருந்தார். அங்கிருக்கும் பொழுதே ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் அவர் சென்றுள்ளார்.

"மாணவர்களுக்கு கற்றுத்தந்த புவியியல் மற்றும் வரலாற்று இடங்களை நான் நேரில் பார்த்தது சிறந்த காட்சிகளாக இருந்தது. உதாரணத்திற்கு ரிஜ்க்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய புகழ்பெற்ற வாட்டர்லூ போரின் ஓவியம் என்னை வியக்க வைத்தது. அதேபோல் நான் பல ஆண்டுகளாக கற்பனை செய்து வைத்திருந்தவைகள் எல்லாம் ரியாலிட்டிக்கு நிகராகவே இல்லை".

இந்த பயணத்திலிருந்து அவர் எடுத்துக் கொண்ட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அவர் பார்த்த அந்த காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. இது அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. மேலும் இந்த பயணம் அவரது அச்சங்களை எல்லாம் எடுத்து சென்று விட்டது.

எண்பதுகளில் இருக்கும் பெண்கள் பயணம் செய்வது அரிதான நிகழ்வாகவே இருக்கையில் இவர் ஒரு ஊக்கமாக இருக்கிறார். இப்போது உங்களின் சிறு வயதிற்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும் என்றால் என்ன கூறுவீர்கள் என்று கேட்டபோது "நான் என்னுடைய பயங்களை விட்டுவிட்டு வாழ்க்கையை வாழ சொல்லுவேன். எல்லா நிகழ்வுகளையும் அனுபவமாக மாற்றிக்கொண்டு அதில் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்களுடன் தைரியமாக வாழ்க்கையை வாழ சொல்லுவேன்" என்று கூறினார்.

இளைஞர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்? மேலும் சுதந்திரமான பெண் என்றால் உங்களைப் பொறுத்தவரை யார்?

என்னை பொருத்தவரை சுதந்திரமான பெண் என்றால் மரியாதை மற்றும் தைரியம். எந்த ஒரு சுதந்திரமாக இருந்தாலும் அதற்கு நிறைய போராட்டங்களும், குழப்பங்களும் நேரிடும். நான் சுதந்திரமாக இருக்கும் பெண்களை வணங்குகிறேன். மேலும் இளைஞர்களுக்கு அவர்களின் தகுதியை உணர்ந்து வாழ சொல்லுவேன். பிறருக்காக வளைந்து போக வேண்டாம் என்று சொல்லுவேன். நான் எனது பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பணரீதியான சுதந்திரம் பற்றி கற்றுக் கொடுத்து வளர்த்தேன். மேலும், அவர்களின் பாதையை அவர்கள் உருவாக்கிக் கொண்டு எடுக்கும் முடிவுகளில் தைரியமாக இருக்கும் படி சொன்னேன். இப்பொழுது எனது மகள், பேரப்பிள்ளைகள் இதை பின்பற்றுவது மட்டுமின்றி எனது பல ஆண்டு கனவையும் நிறைவேற்றி உள்ளனர்.


Suggested Reading: சாய்பல்லவி கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

Suggested Reading: கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிய ரித்திகா

அடுத்த கட்டுரை