மாதவிடாய் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய ஐந்து தகவல்கள்

Devayani
01 Nov 2022 | புதுப்பிக்கப்பட்டது 23 Jan 2023
மாதவிடாய் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய ஐந்து தகவல்கள்

காலம் காலமாக மாதவிடாயும் அதனைப் பற்றிய உரையாடல்களும் அசுத்தம் என கருதப்படுகிறது. அது வெளிப்படையாய் பேச கூடாத ஒன்றாகவும் இருந்து வருகிறது. வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஏன் சொந்த வீட்டில் கூட ஒரு பெண் மாதவிடாய் பற்றி பேசுவது எளிதான ஒன்று அல்ல. மாதவிடாய் பற்றிய இந்த சமூக கருத்துக்களை உடைக்க வேண்டும் எனில் மகன்களுக்கும், மகள்களுக்கும் தாய்மார்கள் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அம்மாக்கள் தங்களால் முடிந்தவரை மகள்களுடன் இது பற்றின உரையாடல்களை தவிர்க்கிறார்கள். தங்கள் மகள் வயதிற்கு வரும் வரையில் இதை மறைக்க நினைக்கிறார்கள். சில சமயம் அம்மாக்களிடம் மாதவிடாய் பற்றியும், வீட்டில் மறைத்து வைத்திருக்கும் நாப்கினை பற்றியும் சில கேள்விகள் கேட்டால் பெரும்பாலும் அந்த உரையாடல்களை தவிர்க்கவே நினைக்கிறார்கள்.

அம்மாக்கள் மகன்களை கையாளும் பொழுது இது இன்னும் மோசமாகிறது. மகன்களுடன் மாதவிடாய் பற்றி உரையாட வேண்டிய அவசியம் என்ன? என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். மகன்கள் மாதவிடாய் பற்றி சொந்தமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அல்லது காதலி, மனைவி மூலமாகவோ தானாகவே கற்றுக் கொள்வர் என நம்புகிறார்கள்.

period products

ஆனால் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது. குறிப்பாக பருவம் அடையும் வயதில் இருப்பவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அவர்கள் உடல்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி இரு பாலினத்தவரும் அறிய வேண்டும்.

எனவே, ஒவ்வொரு தாயும் அவர்களின் பிள்ளைகளுக்கு பாலினத்தை பொருட்படுத்தாமல் மாதவிடாய் பற்றி சொல்ல வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 

1. மாதவிடாய் அசுத்தம் அல்ல:

மாதவிடாய் கருப்பையை சுத்தமாக வைத்திருப்பதற்கான ஒரு செயல்முறையாக கருதுங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை யாரும் வெறுக்க மாட்டார்கள். அப்படியானால் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏற்படும் இயற்கையான உடல் செயல்பாட்டை ஏன் அசுத்தம் என அழைக்கிறோம். மாதவிடாய் எந்த ஒரு நபரையும் அசுத்தமாகவோ அல்லது அழுக்காகவோ மாற்றாது என்று குழந்தைகளுக்கு சொல்வது, இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில் அனுபவிக்கும் மாதவிடாய் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர உதவும்.

2. மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் போலவே மாதவிடாய் ஆரோக்கியமும் முக்கியமானது:

ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த பட்டியலில் மாதவிடாய் ஆரோக்கியத்தையும் சேர்க்க வேண்டும். பெண்கள் தியாகம் செய்பவர்களாகவே வளர்க்கப்படுகிறார்கள். அதன் விளைவாக மற்றவர்கள் தேவைகளை அவர்களின் தேவைக்கு முன் வைக்கிறார்கள். இவ்வாறு நடந்து கொள்வது பல சமயங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் அல்லது அதிக வேலை செய்கிறார்கள். இதுவே பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது. அவர்களின் மாதவிடாய் ஆரோக்கியமும் மனம், உடல் ஆரோக்கியம் போல முக்கியமானது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

period cramps - stomach pain

மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் ஒரு பெரிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, சிறு வயதில் இருந்து அதை புறக்கணிக்காமல் மாதவிடாய் ஓட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதனால்தான் பள்ளி பாடத்திலும் மாதவிடாய் ஆரோக்கியத்தை சேர்க்க வேண்டும். இது அவர்களுக்கு இயல்பான மாதவிடாய் எது? இல்லாதது எது? என அறிய உதவும். இது மாதவிடாய் அனுபவிப்பவர்களுக்கும், தங்கள் அன்புக்குரியவர்களை பார்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

3. உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு வெட்கப்படக் கூடாது:

பருவமடைதல் என்பது நாம் அனைவரும் கடந்து செல்லும் மாற்றமாகும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது அந்தரங்க முடியின் வளர்ச்சி, மார்பகங்களின் வளர்ச்சி, ஹார்மோன்களின் அதிகரிப்பு இதுபோன்று உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை நினைத்து பல பெண்கள் வெட்கப்படுகிறார்கள். இந்த இயல்பான மாற்றங்கள் நம்மை சங்கடமாக்க கூடாது. அதேபோல் மாதவிடாய் பற்றி வெட்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதை அம்மாக்கள் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

menstrual cup

4. மாதவிடாய் உங்களை கட்டுப்படுத்துவதில்லை:

மாதவிடாய் நம்மை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைப்பதில்லை. மாறாக, இந்த சமூகம் தான் மாதவிடாயை ஒரு காரணமாக காட்டி நம்மை கட்டுப்படுத்த நினைக்கிறது. சமூகம் மாதவிடாய் நேரத்தில் நம்மை அறைக்குள் முடக்கி வைப்பது, வெளியே செல்ல விடாமல் தடுப்பது, கோவில்களுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போல மாதவிடாயை சுற்றி நிறைய விதைகளை பெண்களுக்கு எதிராக விதித்துள்ளது. பெண்களின் உடலில் நடக்கும் இயற்கையான ஒன்றை வைத்து இந்த சமூகம் பாலின வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. மாதவிடாயின் போது ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை அவளே முடிவெடுக்க வேண்டும். அவள் மரத்தான் ஓட நினைத்தாலும் அல்லது வேலையில் இருந்து விடுப்பு எடுக்க நினைத்தாலும் அது அவள் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர இந்த சமூகம் அவள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் மீது திணிக்க கூடாது.

5. அனைவரின் மாதவிடாயும் ஒரே மாதிரி இருக்காது:

பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமான மாதவிடாய்களை அனுபவிக்கிறார்கள். எனவே, எந்த ஒரு பெண்ணின் மாதவிடாய் அனுபவத்தையும் இன்னொரு பெண்ணின் மாதவிடாயுடன் ஒப்பிடக்கூடாது. சொல்லப்போனால் ஒரே பெண்ணின் ஒவ்வொரு மாத மாதவிடாயும் வித்தியாசமாக இருக்கலாம். சிலருக்கு ஏழு நாட்கள் இரத்தப்போக்கு இருக்கலாம், ஐந்து நாட்கள் இரத்தப்போக்கு இருக்கலாம் அல்லது மூன்று நாட்களாக கூட இருக்கலாம். சில சமயம் அதிக வலி ஏற்படலாம், சில சமயம் வலி இல்லாமலும் இருக்கலாம். மாதவிடாயின் சுழற்சி 30 நாள் முதல் 40 நாள் வரை செல்லவும் நேரலாம். ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக நடப்பதை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக அவர்களை ஊக்கவிக்க வேண்டும்.

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் அவசியமான ஒன்றாகும். எனவே, குழந்தைகளுக்கு அதைப் பற்றி கற்பிப்பது தாய்களின் பொறுப்பு மட்டுமல்ல தந்தையின் பொறுப்பும் கூட. இந்த ஐந்து குறிப்புகளையும் பருவமடையும் வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு கற்பித்தால் மாதவிடாய் இயற்கையான ஒன்று என்றும் அதை பற்றி வெட்கப்படவோ, அதை அசுத்தமாக நினைப்பதற்கோ ஒன்றும் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

Read The Next Article